Thursday, August 22, 2013

பழந்தமிழ் போர்க்கருவிகள்:

பழந்தமிழ் போர்க்கருவிகள்:

1) வளைவிற்பொறி 
2) கருவிரலூகம் 
3) கல்லுமிழ் கவண் 
4) கல்லிடுகூடை 
5) இடங்கணி 
6) தூண்டில் 
7) ஆண்டலையடுப்பு
 கவை 
9) கழு
 10) புதை 
11) அயவித்துலாம் 
12) கைப்பெயர் ஊசி 
13) எரிசிரல் 
14) பன்றி 
15) பனை 
16) எழு 
17) மழு
 18) சீப்பு 
19) கணையம்
 20) சதக்களி 
21) தள்ளிவெட்டி
22) களிற்றுப்பொறி 
23) விழுங்கும் பாம்பு 
24) கழுகுப்பொறி 
25)புலிப்பொறி 
26) குடப்பாம்பு 
27) சகடப்பொறி 
28) தகர்ப்பொறி 
29) அரிநூற்பொறி 
30) குருவித்தலை
 31) பிண்டிபாலம் 
32) தோமரம் 
33) நாராசம்
 34) சுழல்படை 
35) சிறுசவளம் 
36) பெருஞ்சவளம் 
37) தாமணி 
38) முசுண்டி 
39) முசலம் 
40) வளரி

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரு வியப்பை தருவதாக அமைந்துள்ளது.

தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள - முனைவர். மு.பழனியப்பன்

தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது, இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,

எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது, முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகவும், எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75) அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது,


இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கென சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன, அவ ற்றை ஆய்வுநோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

- நண்பனின் பக்கம்

தஞ்சை கோயில்


பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !


இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது , இது எப்படி சாத்தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.


படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.


இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது. !!

Monday, August 12, 2013

வள்ளுவம்


மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம்....


                        

உயர் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்லவேண்டிய நிற்பந்தம், இவ்வளவு காலமும் தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழ்ந்த ஒரு இளைஞன் முதல் முறையாக பெற்றோரை பிரிந்து செல்லுகின்றான். அவனுக்கு எதை கொண்டு செல்லவேண்டும் எதை தவிர்க்கவேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றம். எப்படியான ஆடைகளை தெரிவுசெய்வது? இதுவரை படித்த நூல்கள் ஏதேனும் தேவைப்படுமா? புதிய மொழி, கலாச்சார அமைப்புக்கொண்ட பிரதேசத்தில் எப்படி சவால்களை எதிர் கொள்வது? போன்ற எண்ணற்ற கேள்விகள் அவனது ஆழ் மனதில் எழுந்தன. அதற்கு அவனுடைய தந்தை புறப்படும் பொழுது அவனுக்கு ஒரு திருக்குறள் நூலை கொடுத்து மூன்றே மூன்று வார்த்தைகளை மட்டுமே கூறி வழியனுப்பினார் புதிய கலாச்சாரம், புதிய வாழ்க்கை நெறிகள் வென்றுவா மகனே!. கூடி நின்ற‌ நண்பர்களுக்கு ஓர் ஏழனச்சிரிப்பு, காரணம் அவனது கற்கை நெறி கணிதத்துறை சார்ந்தது இவர் என்ன திருக்குறளை கொடுத்தனுப்புகிறாரே..


ஆம் தோழர்களே சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். எந்த ஊர், எந்த நாடு, எந்த இனம் எல்லாவற்றையும் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துகின்ற உயிர் கொண்டது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது. இத்தகைய அரும் நூலை நாம் எந்த அளவிற்கு உதாசீனம் செலுத்துகிறோம் என்பதை ஒரு கவிஞன் வேதனையோடு பதிவு செய்கிறான்.

இந்துக்களின் வீடுகளிலே தேவார, சமய நூல் இருக்கிறது
இசுலாமியன் வீடுகளில் குர்ரான் இருக்கிறது
கிறிஸ்தவன் வீடுகளில் வேதாகமம் இருக்கிறது
எல்லோருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய திருக்குறள் நூலகத்திலே இருக்கிறது.


திருக்குறளின் பெருமை கேளீர்!

தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட‌
பனையளவு காட்டும் படித்தால்        - ‍கபிலர் -

வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்
உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து  - பரணர் -

உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய் மொழி மாண்பு  - மாங்குடி மருதனார் -

பொய்ப்பால் பொய்யேயாய்ப் போயின பொய்யல்லாத‌
மெய்ப்பால் மெய்யாய் விளங்கினவே _ முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால்
வையத்து வாழ்வார் மனத்து.   - தேனிக்குடி கீரனார் -


வள்ளுவன் உணர்த்தும் வாழ்க்கை நெறிகளை கடைப்பிடிப்போர் எங்கு போனாலும் எங்கு வாழ்ந்தாலும் அறன் தவறிச்செல்லார் என்பது திண்ணம்.

அணுக்கதிர் வீச்சு


தொடரும் அணுக் கதிர்வீச்சின் தாக்கம். மரணத்தை நிச்சயித்து பிறக்கும் ஈராக் குழந்தைகள் ! 


 


2003 ஆம் ஆண்டு அமெரிக்கா பிரிட்டன் படைகள் ஈராக் நாட்டின் மீது போர் தொடுத்தது. அப்போது அவர்கள் அடர்த்தி குறைவான உரேனியம் ( Depleted Uranium) தாங்கிய ஆயுதங்கள் அளவிற்கு அதிகமாக பயன்படுத்தினர். இந்த வகையான அடர்த்தி குறைவான உரேனியம் அணு உலைகளில் இருந்து வெளியாகும் அணுக கழிவுகளில் இருந்தே தயாரிக்கப் படுகிறது என்பது தான் நாம் அறிய வேண்டிய தகவல். 

இந்த அணுக்கதிர் வீச்சு கொண்ட ஆயுதங்கள் 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் பயன்படுத்தினாலும், அதன் கதிர்வீச்சு தாக்கம் இன்றளவும் ஈராக் நாட்டின் நஜாப் , பாசுல்லா போன்ற நகரங்களில் பெருமளவில் காணப்படுகிறது. இங்கு பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் புற்று நோயுடனும், உடல் சிதைவடைந்த, உருக்குலைந்த நிலையிலேயே பிறக்கிறது. அப்படியே பிறந்துவிட்டாலும் இக்குழந்தைகள் ஒரு ஆண்டுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை என்பது வேதையான தகவல். 

ஈராக் போரின் போது அமெரிக்க ராணுவம் சுமார் 440,000 கிலோ அடர்த்தி குறைவான உரேனியம் பயன்படுத்தி உள்ளது . இதன் விளைவாக ஈராக் நாட்டிலுள்ள சுவர்கள், மணல் , செங்கற்கள், மற்றும் எல்லாப் பொருட்களில் இந்த உரேனியம் அணுத் துகள்கள் பதிந்து உள்ளது. 

மேலும் புற்று நோயுடன் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களை சோதனை செய்த போது அவர்களின் முடிகளில் இந்த உரேனியம் அணுத் துகள்கள் இருப்பது கண்டறியப் பட்டது. இப்போது ஈராக் மருத்துவமனைகளில் சாதாரண சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிப்படைந்த குழந்தைகளை விட புற்று நோயினால் பாதிப்படைந்த குழந்தைகளே அதிகமாக காணப்படுகின்றனர். 

ஏன் இந்த வகையான அணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியது ? 

சாதாரண வெடிமருந்து பொருந்திய ஆயுதங்கள் பயன்படுத்தினால் அவைகள் ஓரளவு சேதத்தை உண்டு செய்தாலும் , உரேனியம் அணுத் துகள்களை தாங்கிய ஆயுதங்கள் , பெரிய சுவற்றை ஓட்டை போட்டு துளைக்கும் தன்மை உடையது. பெரிய போர் வாகனங்கள், டாங்கிகளை அழித்தொழிக்கும் வல்லமை பொருந்தியவை . அதனால் தான் இந்த அணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. 

இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும் , இங்கு அமெரிக்க விட்டுச் சென்ற அணுகதிர் வீச்சு எச்சங்கள் இந்த மண்ணல் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. இதை அவ்வளது எளிதில் இந்த மண்ணில் இருந்து நீக்க முடியாது. இந்த எச்சங்கள் இந்த மண்ணில் இருந்து நீங்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம் என ஆய்வாளர்களை தெரிவிக்கின்றனர் . 

பாதிப்புக்கு உள்ளான ஈராக் நகரங்களில் உள்ள தாய்மார்கள் இப்போது குழந்தை பெற்றுக் கொள்ளவே அஞ்சுகிறார்கள். அணு ஆயுதத்தை சோதனை செய்ய அமெரிக்கா ஜப்பானில் உள்ள இரோஷிமா நாகசாக்கி நகரங்களில் அணுகுண்டு போட்டு பல லட்சம் மக்களை கொன்று ஒழித்தது நாம் அறிவோம் . ஆனால் அந்த அணு குண்டுகளின் கதிர்வீச்சை காட்டிலும் பல நூறு மடங்கு ஈராக் நாட்டில் அணுக கதிர்வீச்சை அமெரிக்கா விட்டுவிட்டு சென்றுள்ளது என்பது தான் கொடுமை. 

ஈராக் நாட்டில் அணுக கதிர் வீச்சால் ஏற்பட்ட இந்த அவல நிலை உலக நாடுகளுக்கு ஓர் பாடமாக இருக்கட்டும். அணு உலைகள், அணு ஆயுதங்கள் இல்லாத உலகமே தற்போதைய தேவை. குறிப்பாக இந்தியா போன்ற ஊழல் மிகுந்த, முறையான கட்டமைப்பு இல்லாத நாடுகளில் அணு உலைகளோ , அணு ஆயுதங்களோ இருக்கவே கூடாது. இருந்தால் அது இந்திய நாட்டு மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி விடும். ஈராக் போன்று பல புற்றுநோய் தாங்கிய ஒரு தலைமுறை நமக்கு வேண்டாம் என்றால் அணுஉலைகளை இந்திய மக்கள் யாவரும் இழுத்து மூடுவோம். 

தமிழ் மண்ணில் இருந்தும் அகற்றுவோம். தூய்மையான மாசில்லா சுற்றுப்புறச் சூழலை நம் எதிர்கால சந்ததிக்கு வழங்குவோம்.

Thursday, August 8, 2013

முல்லைப் பெரியாறு பற்றி கோபிநாத்.....


முக நூலில் இருந்து .........................


         

முல்லைப் பெரியாறு பற்றி  கோபிநாத்.....

அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர். மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ?

தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே -புதிய அணையைக் கட்டி,தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே.இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக - நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது) எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள். பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

                       

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும். சரி நிரம்பட்டுமே. நல்லது தானே ! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது. புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -புரிகிறது. ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ? அயோக்கியத்தனம்.வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக - பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் ! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள்.பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது. கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு - நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.
 
இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ? மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள். வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.

நன்றி,
கோபிநாத்

ஆத்திசூடி

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..! 


                         
  • 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
  • 2. ஆறுவது சினம் / 2. Control anger.
  • 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
  • 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
  • 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
  • 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
  • 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
  • 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
  • 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
  • 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
  • 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
  • 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
  • 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
  • 14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
  • 15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
  • 16. சனி நீராடு / 16. Shower regularly.
  • 17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
  • 18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
  • 19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
  • 20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
  • 21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
  • 22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
  • 23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
  • 24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
  • 25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
  • 26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
  • 27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
  • 28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
  • 29. இளமையில் கல் / 29. Learn when young.
  • 30. அரனை மறவேல் / 30. Cherish charity.
  • 31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
  • 32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
  • 33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
  • 34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
  • 35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
  • 36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
  • 37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
  • 38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
  • 39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
  • 40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
  • 41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
  • 42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
  • 43. கெளவை அகற்று / 43. Don't vilify.
  • 44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
  • 45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
  • 46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
  • 47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
  • 48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
  • 49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
  • 50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
  • 51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
  • 52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
  • 53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
  • 54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
  • 55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
  • 56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
  • 57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
  • 58. தீவினை அகற்று / 58. Don't sin.
  • 59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
  • 60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
  • 61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
  • 62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
  • 63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
  • 64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
  • 65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
  • 66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
  • 67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
  • 68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
  • 69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
  • 70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
  • 71. நூல் பல கல் / 71. Read variety of materials.
  • 72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
  • 73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
  • 74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
  • 75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
  • 76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
  • 77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
  • 78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
  • 79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
  • 80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
  • 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
  • 82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
  • 83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
  • 84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
  • 85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
  • 86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
  • 87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
  • 88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
  • 89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
  • 90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
  • 91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
  • 92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
  • 93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
  • 94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
  • 95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
  • 96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
  • 97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
  • 98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
  • 99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
  • 100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
  • 101. வித்தை விரும்பு / 101. Long to learn.
  • 102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
  • 103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
  • 104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
  • 105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
  • 106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
  • 107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
  • 108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
  • 109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.
 - ஔவையார்.

நவநீதம் பிள்ளை

                    

Nathan Sk

இலங்கையை நடுங்கவைக்கும் பஸ் டிரைவரின் மகள் 

ஒரு பஸ் டிரைவரின் மகள் என்று சொன்னால் நம்புவீர்களா! பாரதத் திருநாட்டின் பிரதமரைப் பார்த்தே பயப்படாத (!) இலங்கை அரக்கர்கள், ஒரு பஸ் டிரைவரின் மகளைப் பார்த்து நடுங்குவதாவது – என்று நம்பிக்கையே இல்லாமல் திருப்பிக் கேட்பீர்கள். ஆனால், அந்த பஸ் டிரைவரின் மகள் பெயரைச் சொன்னால், நான் சொல்வதை நிச்சயமாக நம்புவீர்கள். அவரது பெயர், நவநீதம் பிள்ளை.

இப்போது சொல்லுங்கள் நம்புகிறீர்களா இல்லையா! (ச்சும்மா பேரைச் சொன்னாலே நடுங்குதுல்ல!)

ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம் பிள்ளை மட்டும் இல்லையென்றால், இந்நேரம் ‘இனப்படுகொலை’ என்கிற குற்றச்சாட்டை, செம்மணிப் புதைகுழிக்குப் பக்கத்திலேயே குழிதோண்டிப் புதைத்திருப்பார்கள் ராஜபக்சே சகோதரர்கள். அந்த ஒற்றைப் பெண்மணியால் உயிர்த்திருக்கிறது அந்தக் கடுமையான குற்றச்சாட்டு. ‘சர்வதேச சுதந்திர விசாரணையின் மூலமே இலங்கையில் என்ன நடந்தது என்கிற உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்’ என்று நவ்விப் பிள்ளை என்று அன்போடு அழைக்கப்படும் நவநீதம் பிள்ளை சொல்கிற போதெல்லாம் வியர்த்துப் போகிறது புத்தனின் புத்திரர்களுக்கு!

இத்தனைக்கும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கேட்டுக் குரல் கொடுக்கும் எவரும், கண்மூடித்தனமாகவோ முட்டாள்தனமாகவோ பேசவில்லை. விசாரணையே இல்லாமல் ராஜபக்சேவைத் தூக்கில் போடு என்றோ, எங்கள் சகோதரிகளைக் கற்பழித்த அவனது உறுப்புகளையோ துருப்புகளையோ உப்புக் கண்டம் போடவேண்டும் என்றோ கோரவில்லை எவரும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்து என்றுதான் சொல்கிறோம். தன்னுடைய உயிர் நண்பனின் அனுக்கிரகத்தால் இத்தனை நாளாகக் குற்றவாளிக் கூண்டில் நிற்காதிருக்கிறது இலங்கை. இன்னும் நீண்ட நாளைக்கு இந்த நாடகம் நீடிக்காது – என்பதை உணர்த்துவதாக இருக்கிறது நவநீதம் பிள்ளையின் விஜயம்.

அடுத்த வாரம் இலங்கைக்குச் செல்கிறார் நவ்விப் பிள்ளை. மழையில் நனைவதற்கு முன்பே சளியில் அவதிப் படுகிற ஆஸ்துமா நோயாளி மாதிரி, இப்போதே நெளிந்துகொண்டிருக்கிறது ராஜபக்சே அரசு.

நவ்விப் பிள்ளையின் பாதுகாப்பு ஆலோசகர், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க இலங்கைக்கு வந்திருக்கிறார். நடந்த இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவனான சரத் பொன்சேகா ‘நான் நவ்விப்பிள்ளைச் சந்தித்தே ஆகவேண்டும்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். நவ்விப் பிள்ளை நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் தடையின்றிப் போகலாம் – என்று அறிவித்திருக்கிறது இலங்கை. எந்த இலங்கை? ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவைக் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்த அதே இலங்கை. அந்த அளவுக்கு நடுங்கிக் கொண்டிருக்கிறது அது.

நவ்விப் பிள்ளையின் இலங்கை விஜயத்துக்கு முன்னோட்டமாக, அவர் அனுப்பிய ஐ.நா. குழு ஒன்று சென்ற ஆண்டு இலங்கைக்கு வந்து சென்றது. ‘இறுதிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கையே நடத்திக்கொள்ளும் விசாரணை நம்பகத்தன்மை அற்றது. இலங்கை அதிகாரிகளின் விசாரணை பாரபட்சமானது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் – என்று வாக்குறுதி கொடுத்த இலங்கை, அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்றெல்லாம் குற்றஞ்சாட்டிய அந்தக் குழு, சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்வதைக் கவலையுடன் சுட்டிக்காட்டியது. அந்தக் குழுவின் அறிக்கை, அடங்காப்பிடாரி இலங்கையின் பிடரியில் விழுந்த அடி.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.நா. அமைப்புக்குள் இருந்துகொண்டே, ‘இறுதிப் போர் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் ஐ.நா. தனது கடமையை ஆற்றத் தவறிவிட்டது’ என்று நவநீதம் பிள்ளை ஒளிவு மறைவின்றிப் பேசியது, ஐ.நா.வுக்குள் இருக்கும் இலங்கையின் ஏஜென்டுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னைத் தானே விசாரிக்க இலங்கை அமைத்த எல்.எல்.ஆர்.சி. விசாரணை ஆணையம் ஒரு மோசடி – என்பதையும், வடகிழக்கில் தமிழ்ப் பெண்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர் – என்கிற உண்மையையும் உலகறிய எடுத்துச் சொல்லி இலங்கையை மேலதிக அச்சத்தில் ஆழ்த்தினார் அவர்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்திருக்க வேண்டியது. பல்வேறு நெருக்கடிகள் மூலம், அவரது வருகைக்கு முட்டுக்கட்டையாக இருந்தது இலங்கை. அவர் வருவதை நீண்ட காலத்துக்குத் தடுக்க முடியாது – என்பதை உணர்ந்துகொண்ட பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி – மார்ச்சில் அவரைச் சந்தித்துப் பேச ஒரு குழுவை அனுப்பத் தீர்மானித்தது. அந்தக் குழு, நவ்விப் பிள்ளையிடம் – தமிழர் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள், மீள் குடியேற்றம், மறு சீரமைப்பு – பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லும் என்று செய்திகள் வந்தன. (இந்த வார்த்தைகளுக்கான ராயல்டியை நாச்சிகளுக்கும் நா.சா.க்களுக்கும் கொடுத்தார்களா இல்லையா!) இதுபோன்ற வார்த்தை ஜாலங்களால் ஏமாந்துவிட நவ்விப் பிள்ளை ஒன்றும் அமெரிக்காவோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ கிடையாது என்பதை, இலங்கை இப்போது உணர்ந்திருக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டதும், நவநீதம் பிள்ளை சொன்ன வார்த்தைகள் மறக்க இயலாதவை. “உலகின் எந்த மூலையில் எவர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கான குரலாக மனித உரிமைகள் ஆணையம் இருக்கும்” என்றார் அவர். அப்படிச் சொல்வதற்கான தகுதி அவருக்கு இருந்தது. ஐ.நா.வில் பொறுப்பேற்கும் முன், சுமார் 8 ஆண்டுகள், ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து விசாரித்த சர்வதேச குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்த அவர்தான், அதன் தீர்ப்புரையை எழுதியவர்.

இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான, ஜீன் பால் அகாய்ஸு – என்பவருக்கு அந்த நடுவர் மன்றம் கொடுத்த தண்டனை உலக வரலாற்றில் மிக முக்கியப் பதிவு.

1994ல், ருவாண்டா நாட்டில் டூட்ஸி இனத்தவருக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. அந்த நாட்டின் ஜனநாயகக் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளில் ஒருவர், ஜீன் பால் அகாய்ஸு. முன்னாள் ஆசிரியரான அவர், சமயோசிதத்துக்குப் பெயர்பெற்றவர். டாபா பகுதி மேயராக இருந்த அவரது பொறுப்பில்தான் அந்தப் பகுதி காவல்துறை இயங்கியது. அவரது பகுதியில், ஹூடூ இனத்தைச் சேர்ந்தவர்களால் டூட்ஸி இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர், பாலியல் வன்முறை முதலான பல்வேறு கொடுமைகள் வேறு. அகாய்ஸுவால் அந்தக் கொலைகளையும் கொடுமைகளையும் தடுக்க முடியவில்லை.

விசாரணையில், அந்தப் படுகொலைகளைத் தடுக்க அகாய்ஸு முயலவேயில்லை என்பதும், அவரது மேற்பார்வையிலேயே அவை நடைபெற்றன என்பதும், கொல்லப்பட வேண்டிய டூட்ஸி இனத்தவரின் பட்டியலை ஹூடூ இனத்தவருக்கு அவர்தான் கொடுத்தார் என்பதும், உயிருக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்த டூட்ஸி இனத்தவரைத் தேடிக் கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு சோதனை நடத்த உத்தரவிட்டார் என்பதும் அம்பலமானது. (ஈழத்திலும் இதெல்லாம் அம்பலமாகாமல் போகுமா என்ன?)

இனப்படுகொலை நடந்த அடுத்த ஆண்டு ஜாம்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார் அகாய்ஸு. ருவாண்டா இனப்படுகொலைக்கான சர்வதேச குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒப்படைப்பதற்காக, குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை நாடுகடத்திய முதல் ஆப்பிரிக்க நாடு ஜாம்பியா தான்.

அகாய்ஸு மீது, இனப்படுகொலை, மனித இனத்துக்கு எதிரான குற்றம், இனப்படுகொலை தொடர்பான ஜெனிவா கன்வென்ஷன் மீறல் – உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

“அகாய்ஸு-க்கு நடந்த கொலைகளில் நேரடித் தொடர்பு இல்லை, அதைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு அதிகாரமும் இல்லை. டாபா மக்களின் வெறிச் செயல்களுக்காக, அகாய்ஸு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்” என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. நவநீதம் பிள்ளை இடம்பெற்றிருந்த நடுவர் மன்றம் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மீதான 15 குற்றச்சாட்டுகளில் 9 – ல் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் அடிப்படையில், அகாய்ஸுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள அகாய்ஸு, இப்போது மாலி சிறையில் அந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இனப்படுகொலை – என்பதைக் குறிக்கும் ‘ஜெனோசைட்’ என்கிற வார்த்தை 1944க்குப் பின்தான் உருவானது. ஜெனோ – என்பது ‘இனம்’ அல்லது ‘இனக்குழு’ என்பதைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை. சைட் – என்பது படுகொலையைக் குறிக்கும் லத்தீன் வார்த்தை.

போலந்து நாட்டு யூதரான சட்ட வல்லுநர் ரபேல் லெம்கின் தான், நாஜிக்கள் நடத்திய இனப்படுகொலையைச் சுட்டிக்காட்ட இந்த வார்த்தையை முதல்முதலாகப் பயன்படுத்தியவர். அவரது தொடர் முயற்சிகளால், 1948ல், இனப்படுகொலையைக் கொடிய குற்றமாக ஐ.நா. அறிவித்தது. இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுக்கவும் தண்டிக்கவும் 1948ம் ஆண்டே ஜெனிவா கன்வென்ஷன் உருவானாலும், அதன் அடிப்படையில் முதல் முதலாகத் தண்டனை வழங்கியது, நவநீதம் பிள்ளை இடம்பெற்றிருந்த ருவாண்டா இனப்படுகொலைக்கான நடுவர் மன்றம்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

அந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பு திட்டவட்டமானதாகவும் தெளிவானதாகவும் இருந்தது. ஒரு பட்டிமன்றத்திலேயே கூட திட்டவட்டமான தீர்ப்பைத் தெரிவிக்காமல், வழவழா கொழகொழா என்று தீர்ப்பு வழங்கும் நாம், அதன் சில பகுதிகளைத் தெரிந்துகொண்டாக வேண்டும்.

“படுகொலைகள், சித்ரவதைகள், கற்பழிப்பு உள்ளிட்ட மானுட விரோதச் செயல்கள் அனைத்தும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும்……..

கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளை இனப்படுகொலைக் குற்றமாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்……

டூட்ஸி இனத்தை அழித்து ஒழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்பழிப்புகள் திட்டமிடப்பட்ட முறையில் நடந்திருக்கின்றன. டூட்ஸி இன மகளிர் மட்டுமே இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். இதிலிருந்து, இந்தப் பாலியல் பலாத்காரங்கள், டூட்ஸி இனத்தை அழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது……

ஒருவரது விருப்பத்துக்கு மாறாக அவரை பலவந்தப்படுத்தி உடல்ரீதியாக பலாத்காரம் செய்வது – கற்பழிப்பு. அதுவும் இனப்படுகொலையே! ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சிறிது சிறிதாகவோ முழுமையாகவோ அழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படுகிற இத்தகைய குற்றம் நிச்சயமாக இனப்படுகொலை தான்”……………………..

இவையெல்லாம் அந்த நடுவர் மன்றத் தீர்ப்பின் சில பகுதிகள். (டூட்ஸி என்று வரும் இடங்களில் ‘தமிழ்’ என்று மாற்றிப் படித்துப் பாருங்கள்… உள்ளம் கொதிக்கும்!)

போர்க்களங்களில் கற்பழிப்பெல்லாம் சகஜம் – என்று சொல்லும் வக்கிரபுத்தி பிடித்த மிருகங்களை நவநீதம் பிள்ளை கடுமையாகச் சாடியிருந்தார். ‘கற்பழிப்பு என்பது போரில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிச் சின்னம் கிடையாது. இனி, அது கொடிய போர்க் குற்றம், இனப்படுகொலையாகவே அது கருதப்படும்’ என்றார் பிள்ளை.

அந்த நவநீதம் பிள்ளை தான் இப்போது இலங்கைக்கு வரப் போகிறார். உள்ளூரில் ஓணான் பிடித்து அடுத்தவன் வேஷ்டிக்குள் விட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்த மகிந்தன் கோஷ்டிக்குக் காய்ச்சல் வருமா வராதா?

இப்போது பஸ் டிரைவர் விஷயத்துக்கு வருகிறேன். நவநீதம் பிள்ளை, தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் ஒரு வறிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்த, இந்தியக் குடிவழித் தமிழர். அவரது தந்தை, பேருந்து ஓட்டுநராக இருந்தவர். வறுமையில் வாடினாலும், அறிவுத் திறன் நவநீதம் பிள்ளையின் செல்வமாயிருந்தது. உள்ளூர் இந்தியர்களின் உதவியுடனேயே சட்டம் படித்த அவர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமையைப் பெற்றது சாதாரண சாதனையல்ல!

பிள்ளையின் கணவரும் ஒரு வழக்கறிஞர், நிறவெறி வெள்ளை அரசுக்கு எதிராக மண்டேலா நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். கணவர் உள்பட நிறவெறிக்கு எதிராகப் போராடிய போராளிகளுக்கு தக்க சமயத்தில் தேவையான சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் நவநீதம் பிள்ளை.

1973ல், ரொபன் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த மண்டேலா உள்ளிட்ட அரசியல் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திக்க சட்டப்படியான உரிமையை வாதாடிப் பெற்றவர் நவநீதம் பிள்ளை. நிறவெறியிலிருந்து விடுபட்ட பிறகு, 1995ல் தென் ஆப்பிரிக்க உயர்நீதி மன்றத்தில் பிள்ளை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியக் குடிவழித் தமிழர் அவர்தான்.

முன்னதாக, 1967ல் நேட்டால் மாகாணத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்க நவநீதம் பிள்ளை முயன்றபோது, எந்த சட்ட ஆலோசனை நிறுவனமும் அவரைச் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வெள்ளையரல்லாத ஒரு வழக்கறிஞரின் கீழ் வேலை செய்ய விரும்பமாட்டார்கள் என்பதே அதற்குக் காரணம். வேறு வழியில்லாமல் தனியாக வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார் பிள்ளை. அப்படி தனக்கென்று ஒரு அலுவலகம் ஏற்படுத்திக் கொண்ட முதல் பெண் வழக்கறிஞர் அவர்தான்.

வெள்ளையரல்லாத வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் அறைக்குச் சென்று அவர்களைச் சந்திக்க முடியாத நிலை அப்போது இருந்தது. ‘நீதிபதியின் அறைக்குள் ஒரு நீதிபதியாகவே தான் நான் நுழைய வேண்டியிருந்தது’ என்றார் நவநீதம் பிள்ளை, 1995ல் நீதிபதியாக நியமிக்கப் பட்ட பின், நகைச்சுவை உணர்வுடன்!

2008ல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம் பிள்ளையை நியமிக்க பான் கீ மூன் முடிவெடுத்தபோது, அமெரிக்கா அதைக் கடுமையாக எதிர்த்தது. என்றாலும், அனைத்துத் தகுதிகளின் அடிப்படையிலும் ஏகமனதாக அவர் நியமிக்கப்பட்டார். 2012ல் மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட பிள்ளை 2014 வரை, அந்தப் பொறுப்பில் இருப்பார். அதனால்தான் அஞ்சி நடுங்குகிறது இலங்கை.

நவநீதம் பிள்ளையின் நேர்மையும் அஞ்சாமையும் அனுபவமும் அறிவும் தெளிவும், செய்த இனப்படுகொலையை, நடத்திய பாலியல் வன்முறைகளை மூடி மறைக்க இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் தகர்த்து எறிந்துவிடும் என்கிற அச்சத்தில் இலங்கையும், நம்பிக்கையில் நாமும் இருக்கிறோம்.

அன்று நீதிபதியின் அறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நவநீதம் பிள்ளை, நீதிபதியாகவே அந்த அறைக்குள் நுழைந்து வரலாறு படைத்தார். இன்று, இலங்கைக்குள் நுழைவதற்கான தடங்கல்களையெல்லாம் தகர்த்து அங்கே செல்கிறார். அங்கும் அவர் வரலாறு படைப்பார் என்பது நிச்சயம். ருவாண்டாவில் டூட்ஸி இன மக்களுக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமா என்ன?

காமன்வெல்த் மாநாட்டை எப்படியாவது நடத்தியாக வேண்டும் இலங்கைக்கு. இப்படியொரு இக்கட்டான நிலையில் நவநீதம் பிள்ளை வருவதைக் குறுக்குவழிகளில் தடுக்க முயல்வது தற்கொலை முயற்சியாகிவிடும் என்பதால், அத்தகைய முயற்சிகளில் இலங்கை இறங்காது.

இதையெல்லாம் பேசும் இந்த நேரத்தில், தமிழினத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையே உள்ள டூட்ஸி இன மக்களுக்கு ஒரு சில ஆண்டுகளிலேயே கிடைத்த நீதி, 4 ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழத் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்கும் எழும். நீதி கிடைப்பதில் ஏற்படும் இந்தக் காலதாமதத்துக்குக் காரணம் யார் யார்? மூன்று விரல்களை நீட்ட வேண்டியிருக்கிறது… — with Eelam Win.
 

Like ME

Sample Text

Sample Text