Wednesday, September 11, 2013

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்


மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது. மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை.

                                 

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

தமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காணமுடியும்.

செங்காவி வண்ண குகை ஓவியங்கள்

  



கீழ்வாலை கிராமத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி வண்ண குகை ஓவியங்கள் பராமரிப்பின்றி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கீழ்வாலை என்னும் இடத்தில் (விழுப்புரம் மாவட்டம்) விலங்கு முக மனிதஓவியங்கள் கிடைத்துள்ளன. ஓர் ஓவியத்தில் குதிரையின் மீது ஒரு மனிதன்அமர்ந்திருக்க, அக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச்செல்வது போல அமைந்துள்ளது. இதனருகே மற்றுமோர் உருவமும்காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின்முகங்களாக அமைந்துள்ளன. விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல்என்னும் வேட்டைச் சடங்குகளைப்பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக்கருதலாம்.
குதிரையின் மீது மனிதன் அடுத்ததாகப் படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம்காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவைமுகங்களாகவே காணப்படுகின்றன.
இவைகளில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும்பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச்சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோஅல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்.

இவ் ஓவியங்கள் இரும்புக்கால ஓவியங்கள் எனவும், பெருங்கற்கால ஓவியங்கள் எனவும் தொல்லியல்துறை அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது. புதுச்சேரி மாநில முன்னாள் தலைமை செயலாளர் பி.எல்.சாமி, இக்குகை ஓவியங்களுக்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்பிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடையாநத்தம் அருகில் உள்ள விசிறிப்பாறை, ஆலம்பாடி பாறை ஓவியங்கள் ஆகியவை இந்திய தொல்லியல் துறை ஆய்வேடுகளில், இந்தியாவின் மிக முக்கியத்துவம் மிக்க தொல்லியல் இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் புகழ்பெற்ற இடங்களாக குறிக்கப்படுவதில் திருவக்கரை கல்மரங்களைத் தவிர மற்றவை 600 ஆண்டுகளுக்குட்பட்டவை என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.ஆண்டுக்கொருமுறை இந்த இடங்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கும்படியான விழிப்புணர்வு ஓவியப்போட்டிகளை நடத்தி, மனித வரலாற்றுத்தொன்மையை மாணவர்கள் அறிய மாவட்ட கல்வித்துறையும், நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குகை ஓவியங்கள் அமைந்துள்ள பகுதி பராமரிப்பின்றி இருக்கின்றது. இந்த இடத்தினைப்பற்றி குறிப்பிடும் தகவல் பலகையும் உடைந்து போய் தற்போது, சமூக விரோதிகளின் புகலிடமாகவும் விளங்குகிறது.வரலாற்று சிறப்பு மிக்க குகை ஓவியங்கள் அமைந்துள்ள இந்த இடங்களை உரிய பராமரிப்புடன் பாதுகாக்க வேண்டும்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில் -திருச்செங்கோடு...

 

தமிழனின் தலை சிறந்த சிற்பம்:-

நாம் இன்று பெருமையுடன் தமிழையும் தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அழித்து வரும் வேளையில், 1000 ஆண்டுக்கு முன்னர் தமிழன் செதுக்கிய சிற்பம் தான் இது. ஒரு விரல் உயரம் இல்லை, ஒரு கை நீளமும் இல்லை.... எப்படி செதுக்கி இருப்பார்களோ??? உலகில் மற்ற நாடுகள் கட்டிடகலைகளில் இப்பொழுது வேண்டுமானால் சாத்தியம் ஆகலாம்... தமிழன் அன்றே சாதித்து விட்டான்.....அர்த்தநாரீஸ்வரர் கோவில் -திருச்செங்கோடு...

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பார்வையில் பாரதியார்

                                         

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பார்வையில்... 
சுப்பிரமணிய பாரதியார்

இந்திய வரலாற்றில் இரண்டு தத்துவ மரபுகள் உண்டு. ஒன்று வைதீக மரபு. மற்றொன்று அவைதீக மரபு. வைதீக மரபு வழி நின்று சாதி எதிர்ப்பு நிலைக்கு வந்தவர்களாக இராமானுசர், விவேகானந்தர், காந்தியார், பாரதியார் ஆகியோரை குறிப்பிடலாம். அவைதீக மரபு வழி நின்று சாதி எதிர்ப்பு நிலைக்கு வந்தவர்களாக வள்ளலார், சித்தர்கள், பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் ஆகியோரைச் சொல்லலாம். 

நேரெதிர் முரண்பாடு கொண்ட பாரதியையும் பாரதி தாசனையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்தவை தமிழ்மொழி உணர்ச்சியும் சாதியெதிர்ப்பும் என்றால் மிகையாகாது.

பெரியாரை ஆசனாக வரித்துக் கொண்ட பாரதிதாசன் பெரியாரைக் கூட விமர்சித்தது உண்டு. ஆனால் பாரதியாரை ஒருபோதும் விமர்சித்ததில்லை. பாரதி ஆத்திகராக இருந்த போதிலும் அவர் மீது பாரதிதாசன் அளவிடற்கரிய பற்று கொண்டிருந்தார். கனக சுப்பு ரத்தினம் எனும் தனது இயற்பெயரை பாரதிதாசன் என்று மாற்றியவர். அதற்காக கடுஞ்சட்டைத் தோழர்கள் கணை பாய்ச்சிய போதும் அவர் கலங்க வில்லை. பாரதிதாசன் பெயர் வைத்தது தவறென்று எண்ணியதுமில்லை. சாகும் தருவாயிலும் தவறென்று வருந்தியதுமில்லை. தான் "பாரதிதாசன் என்று பெயர் வைத்ததற்கு காரணம் அப்போது அவர் என்னுளத்தில் முதலிடம் பெற்றிருந்தது தான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார் தாம். சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்த வரை நான் கண்டதில்லை. 

பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்டுகளுக்குப் பிறகே பெரியார் இயக்கம் தோன்றியது" என்று வசவாளர்களுக்கு பதிலடி தந்தார். பெரியாருடன் நெருக்கமான நிலையிலும் 1935இல் பாரதியின் நிறைவேறாமல் போன விருப்பமான 'சுப்பிரமணிய கவிதா மண்டலம்' இதழைத் தொடங்கினார். தந்தை பெரியாரை விட்டு விலகிய நிலையிலும் 1964இல் பாரதியார் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க விரும்பினார். தமிழ்ச் சான்றோர்களுக்கு திரைப்படத்தில் மகாகவி பாரதி என்கிற விண்ணப்பத்தை அனுப்பி நிதி வேண்டினார். அக்காரியம் கைகூடுவதற்குள் பாரதி தாசன் மறைந்து போனார்.

திராவிட இயக்கத்தால் போற்றப்படும் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் பாரதிதாசன் தன்னிடம் கூறியதாக கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்: பாரதியைப் போல் நானும் அன்று பேராயக்கட்சியை சார்ந்தவன். கதரைத் தோளில் சுமந்து விற்றவன். நானும் ஆத்திகன். சுப்பிரமணியர் துதியமுது பாடியவன். அப்போது அவரிடத்திலும் தனித் தமிழ் இல்லை. என்னிடத்திலும் தனித் தமிழ் இல்லை. பாரதி படிப்படியாக சீர்திருத்தவாதியாக மாறி வந்ததை கண்ணாரக் கண்டேன். பாரதி உயிரோடிருந்தால் சுயமரியாதைக் காரனாக மாறியிருப்பார்." பாரதி தாசன் கூற்று இப்படி இருக்க பாரதியாரை வைதீகச் சிமிழுக்குள் அடைக்க ஆரியத்தின் பாரதீய சனதா பார்ட்டிகளும், திராவிடத்தின் பாரதீய சனதா பார்ட்டிகளும் முயன்று வருவது வேடிக்கையாக உள்ளது. 

Sunday, September 8, 2013

சித்தர்கள்

             
சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள்.

1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.
5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
9. கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.

உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.

Friday, September 6, 2013

தியாகி கக்கன்


எம்.எல்.எ.-வாக எம்.பி-யாக இருந்தது மட்டுமில்லை...காமராஜர் ஆட்சியில் பத்து ஆண்டுகள் மந்திரியாக வேறு இருந்தவர்...அதுவும் பொதுப்பணித்துறை மந்திரி...மேட்டூர் அணை, வைகை அணை எல்லாம் கட்டுமானப்பணி மேற்கொண்டவர்...
         
தன் வயதான காலத்தில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து இருந்தவர்...எம்.ஜி.யார். வந்து சந்தித்த பிறகே அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர் யார் என்பதே தெரியும்...

எதையாவது தாங்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என எம்.ஜி.ஆர் தொடர்ந்து வற்புறுத்தவே அரசு பஸ்ஸில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் மட்டும் போதும் என்று பெற்றுக் கொண்டவர்

பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது – பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! – பழ நெடுமாறன்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:

வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழ் ஈழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் கொண்ட அவரது செயல் திறனின் விளைவாக இன்று உலகத் தமிழர்கள் எந்த நா`ட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.கிழக்கே சீனா முதல் மேற்கே ரோமாபுரி வரை அன்றைய நாளில் நமது தமிழர்கள் புகழ் கொடியை பறக்க விட்டார்கள்.அந்த வீரம் மிக்க வழியிலே வந்த நம் மக்கள், நமது தமிழர்கள் அடிமை சேற்றில் புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த போது புலிகளாக மாற்றி உலகத்தையே பிரமிக்க வைத்த பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பேர் என்னவென்றால் பிரபாகரன் அவர்களின் நட்பும் தோழமையும் எனக்கு கிடைத்ததை பெரும் பேராக கருதுகின்றேன்.

கடந்த முப்பது ஆணடுகளுக்கு மேலாக அவரோடு நெருங்கி பழகி அவரது இலட்சிய நோக்கத்தை புரிந்து கொண்டவன் என்கின்ற முறையில் அவர் தலைமை தாங்கி நடத்துகின்ற போராட்டம், தமிழர்களை விடுவிக்கின்ற போராட்டம் மட்டுமல்ல அது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடிவை கொண்டுவரப் போகின்ற போராட்டம் என்பதை நான் தெளிவாக உணர்ந்தவன் என்கின்ற முறையில் தெரிவித்த பல செய்திகள், அவர் கைப்பட எனக்கு எழுதிய கடிதங்கள், அவர் மட்டுமல்ல, அவர் பெற்றோரும் குடும்பத்தினரும் கூறிய செய்திகள், அவரின் முக்கிய இளமைப் பருவ தோழர்கள், பிற்காலத்தில் அவரது படையில் தளபதிகளாகி வீரசாகசங்கள் புரிந்தவர்கள், என அவர்கள் எனக்கு தெரிவித்த முக்கிய செய்திகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்) என்ற இந்நூலை மூன்று ஆண்டுகள் எழுதியிருக்கின்றேன்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பல்வேறு தேசிய இனங்கள் விடுதலைக்காக போராடிய நூற்றாண்டு ஆகும். இன்னமும் அத்தகைய விடுதலைப் போராட்டங்கள் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டங்கள் உண்டு. இந்தியாவின் மகத்தான தலைவர்களில் ஒருவரான நேதாஜீ சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் சிங்கப்பூரிலே சுதந்திர இந்திய அரசை அமைத்து, இந்திய இராணுவத்தை அமைத்து, இந்திய விடுதலைக்காக போராடிய வரலாறு ஒரு மெய் சிலிர்க்கவைக்கும் வரலாறு ஆகும்.

ஆனால் உலகமறிந்த மாபெரும் தலைவர் சுபாஸ் சந்திர போஸ் அவர்களுக்கு அன்று வல்லரசாக விளங்கிய ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, போன்ற நாடுகள் ஆதரவளித்தன. வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை மதிப்புக்குரிய கோசிமின் நடத்திய போது அவருடைய அந்த போராட்டத்திற்கு செஞ்சீனமும் சோவியத் ஒன்றியமும் எல்லா வகையிலும் துணை நின்றன.

அதைப்போல பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது யாசர் அரபாத் அவர்கள் அதற்கு தலமை தாங்கினாலும் இருபத்தியேழு அரேபிய நாடுகள் அவருக்கு பக்கபலமாக நின்றன.சோவியத் ஒன்றியம் இந்தியா செஞ்சீனம் போன்ற நாடுகள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் எல்லாம் அவருக்கு அங்கீகாரம் அளித்தன. வங்க தேச விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது இந்தியா முழுமையாக உதவியது.அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்திய இராணுவத்தை அனுப்பி வங்கதேச விடுதலையை உறுதி செய்தார்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டங்களிலேயே தனித்தன்மை வாய்ந்த போராட்டம் எதுவென்று சொன்னால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம்தான். பிரபாகரன் அவர்கள் தலைமையில் தமிழீழ போராட்டம் அன்று நடைபெற்ற போதும், இனி நடைபெறப் போகின்ற போதும் சரி அந்தப் போராட்டத்திற்கு உலகில் எந்த நாடோ, எந்த ஒரு அரசோ, ஒரு சிறு உதவி கூட செய்யவில்லை.

மாறாக இந்தியா போன்ற அன்றை நாடுகளே அதற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
                                     
இந்த சூழ்நிலையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரகாகரன் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் துணைகொண்டு அவருடைய நாட்டைச் சேர்ந்த இளைஞர்களையும் யுவதிகளையும் மட்டுமே நம்பி இந்த வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்த நடத்திக்கொண்டு இருக்கின்றார்.

பிரபாகரன் அவர்களை நான் முன்பு குறிப்பிட்ட உலகறிந்த தலைவர்களோடு ஒப்படும் பொழுது வயதாலும் அனுபவத்தாலும் அவர் மிக மிக இளையவர் என்பதில் சந்தேகமில்லை. அந்த தலைவர்களுக்கு எல்லாம் உலக நாடுகள் பல சேர்ந்து துணை நின்றன.அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் நாடோ எந்த அரசோ உதவாமல் தனி மனிதனாக பிரபாகரன் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம் ஆங்கிலத்திலே சொல்வதானால் It is Unique… இந்த மகத்தான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டிய கடமை எல்லா தமிழர்களுக்கும் உண்டு.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீர காவியத்தை அடிப்படையாக கொண்டு நம்முடைய இயக்குனர் வ.கௌதமன் அவர்கள் திரைக் காவியமாக அதை படைக்கவிருப்பதை அறிய மகிழ்கின்றேன். நம்முடைய தம்பி கௌதமன் தியாக முத்திரை பதித்த ஒரு தமிழ் தேசியக் குடும்கத்தின் வழித்தோன்றல்.அவர் இந்தப் படத்தை எடுப்பது எல்லாவகையிலும் சாலச் சிறந்தது என்று நான் கருதுகின்றேன். வள்ளுவ பேராசான் சொன்னது போல “இதனை இவன் இதனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” என்று சொன்னார்.

உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பத்து கோடி தமிழர்களுக்கு நடுவே புரட்சி மலராக மலர்ந்து மணம் வீசி நமது தமிழின பெருமையை உலகறியச் செய்த தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய இந்த திரைக்காவியத்தை எடுப்பதற்கு எல்லா வகையிலும் தகுதி பெற்றவர்.அதற்கான ஆற்றலும் அறிவும் அவரிடம் நிறம்பவே உண்டு. எல்லாவற்றிற்கு மேலாக ஒரு உண்மையான தமிழனாக திகழ்கின்றார். அவர் இப்படத்தை எடுப்பதை நான் மனதார பாராட்டுகின்றேன். மேலும் அவர் படைக்கவிருக்கும் இத்திரைக்காவியத்தை உலகத் தமிழர்கள் வரவேற்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

உலகிற்கு இந்த திரைக்காவியம் ஒரு உன்னதமான தமிழ் மகனின் வரலாற்றை எடுத்துச் செல்லும் காவியமாக இது திகழும். அதற்கு எல்லாவகையிலும் துணை நிற்பதற்கு ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும்.மேலும் இத் திரைப்படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்து சக்தியாக அமையும் என்பதால் இதற்கு ஆதரவு தாருங்கள் என்று உங்களை மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
 

Like ME

Sample Text

Sample Text