Thursday, December 26, 2013

உழைப்புக்கு ஏற்ற கூலி

காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என ஓங்கிக் குரல் கொடுத்தார்கள். அவர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார் காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்புவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்” என்றார். கூட்டம் அமைதியானது.

                      
எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்த...ுடன் இருந்தனர். “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் “கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்” என்று சொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் “தனக்கே அரிசி சொந்தம்” என்று சொல்லி விட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?

வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். இப்படியே போய்க் கடைசியில் சோறு சொந்தம் என்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.

“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் என்பததான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர்.
“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” என்கிற காமராஜரின் கருத்து உண்மைதானே?

Monday, December 9, 2013

அம்மான் பச்சரிசி...

                                 



காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டு உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil - Amman Pacharisi

English - Snake weed

Sanskrit - Dugdhika

Telugu - Reddine narolu

Malayalam - Nela paalai

Botanical name - Euphorbia hirta

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- அகத்தியர் குணபாடம்

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும் .

மரு நீங்க

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்

Tuesday, December 3, 2013

எங்கள் தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? - சுப. உதயகுமாரன்


குற்றச்சாட்டு [1]: தேசத் துரோகி!

இந்திய, தமிழக ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் என்னையும், அணுசக்திக்கு எதிராகப் போராடிவரும் எனது தோழர்களையும் பலவாறாகப் பழித்து வருகிறது. எங்கள் மீது சுமத்தப்படும் முக்கியமான குற்றச்சாட்டு நாங்கள் தேசத் துரோகிகள்.

 
இதில் முக்கியமான கேள்வி: இங்கே தேசம் என்று குறிப்பிடப்படுவது எது? சாதி-மத வெறி பிடித்த, ஊழல் மிகுந்த, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்குத் தூக்கும், முதலாளித்துவ, மக்கள் விரோத, இயற்கையைக் கொல்லும், இயன்றதையெல்லாம் விற்றுப் பிழைக்கும் ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம்தான் தேசம் என்றால், ஆம், நான் தேசத் துரோகிதான். தேசத் துரோகியாக வாழ்வதற்குப் பெருமைப்படுகிறேன். சாவது வரை தேசத் துரோகியாகவே வாழ விரும்புகிறேன், வாழ்வேன்.

“கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென அறிவுமிலார்” என்று பாரதி கவலைப்படுகிற பாமர, சக்தியற்ற, சாமான்ய, சாதாரண மக்கள்தான் தேசம் என்றால், அவர்களுக்கெதிரான அமைப்பை தூக்கி எறியும் தேசத் துரோகியாக வாழ விரும்புகிறேன்.

எனது 21-வது வயதிலேயே இந்தியா எனும் தேசத்தின் பிரதிநிதியாக, தூதுவராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அடுத்த இருபது வருடங்களில் சுமார் 30 நாடுகளில் பல்வேறு பள்ளிக்கூடங்களில், பல்கலைக்கழகங்களில், அலுவலகங்களில், ஆன்றோர் கூடும் சபைகளில், ஐ.நா. மன்றத்தில், சான்றோர் சந்திக்கும் மாநாடுகளில், மக்கள் மன்றங்களில் இந்த தேசத்தின் பெயரை, பெருமையை, பெரும்புகழை உயர்த்திப் பிடித்திருக்கிறேன். என்னால் என் தேசம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த விதத்திலும் சிறுமையடைந்துவிடக் கூடாது, சிரிப்புக்கிடமாகிவிடக் கூடாது என்று கவனமாக, கடமை தவறாது, கண்ணியத்தோடு, கட்டுப்பாட்டோடு வாழ்ந்திருக்கிறேன்.

இன்று நம் மக்கள் தங்கள் வாழ்வை, வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை, வரவிருக்கும் சந்ததிகளை இழந்துவிடக் கூடாது என்று என் தோழர்களோடு எழுந்து நிற்கிறேன். எங்களுக்குத் தரப்படும் பட்டம்: தேசத் துரோகி! ஒரே ஒரு கேள்வி: எங்கள் தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 2, 2013

எனக்கும் “அமெரிக்கா”வுக்கும் உள்ள தொடர்பு - சுப. உதயகுமாரன்




                     
கடந்த 1989 முதல் 2001 வரை சுமார் 12 ஆண்டுகள் நான் கல்லூரி மாணவனாக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, ஆய்வாளராக, வருகைதரு பேராசிரியராக அமெரிக்காவிலே வாழ்ந்தேன், பணியாற்றினேன். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகும், ஆண்டுதோறும் கோடை காலத்தில் அங்கே சென்று வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினேன், இடிந்தகரைக்கு வரும் வரை.

நோட்ரே டேம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் சர்வதேச சமாதானம் பற்றிய முதுகலை பட்டப்படிப்பு படிக்கும்போது, ஆசிரியர்களிடம் “வெறும் விழுமியங்களை மட்டும் படித்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்; எங்களுக்கு யதார்த்த வழிமுறைகளும் தெரிந்திருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்து, மாணவர்களுக்குள் Political Action Committee (PAC) என ஒன்றைத் துவங்கலாம் என முன்மொழிந்து, எனது நெருங்கியத் தோழர்கள் சிலரோடு சேர்ந்து அதைத் துவக்கினேன். தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்திய அராஜகங்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக சாலை மறியல் உட்பட பல போராட்டங்கள் நடத்தினோம். வறுமைக்கு எதிராக, வறுமையில் வாடும் மக்களின் வேதனைகளை அமெரிக்க மக்கள் கண்முன் நிறுத்த மூன்று நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் PAC குழுவினர் உண்ணாவிரதம் இருந்தோம்.

பின்னர் ஹவாய் (Hawai’i) பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். எங்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர் அலுவலகத்தில் (International Students Center) வைத்து CIA (Central Intelligence Agency) எனும் கொடிய அமெரிக்க உளவுத்துறைக்கு ஆள்சேர்க்கும் முயற்சி நடந்தபோது, நானும் பல சர்வதேச மாணவர்களும் அந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த அலுவலகத்தின் முன்பாகவே, எங்கள் அதிகாரி ஜூன் நாட்டன் போராட்டம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதையும் புறக்கணித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (தந்தை) எங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது, எனது வகுப்புத் தோழி சாரா கிலியட்டும் நானும் “அதிபரை கண்ணால் பார்க்க மாட்டோம்” என்று அறிவித்து, அவரது நிகழ்வு நடந்த ஜெஃபர்சன் ஹாலுக்கு (Jefferson Hall) முன்னர் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தோம். அடுத்த நாள் நாளிதழ்களிலெல்லாம் முன்பக்கத்தில் எங்கள் படமும் போராட்டச் செய்தியும் வெளியாயின.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், காலனி ஆதிக்கத்தும் எதிராக ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுத்து, தமது இறையாண்மைக்காக ஹவாய் பூர்வக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களது போராட்டங்கள் பலவற்றில் நானும் பங்கேற்றேன்; ஒரு சாலையோரப் போராட்டத்தில் கலந்துகொண்டபோது, Honolulu Advertiser நாளிதழின் முன்பக்கத்தில் நான் பதாகையோடு நிற்கும் படத்தை பிரசுரித்து, வெளிநாட்டு மாணவர்கள்கூட உள்ளூர் மக்களை ஆதரிக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவாக முன்னணி நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். அதேபோல சில கோரிக்கைகளுக்காக ஹவாய் பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு போராடியபோது, அப்போதைய ஹவாய் மாநில ஆளுநர் திரு. பெஞ்சமின் கயட்டானோவுக்கு நான் எழுதிய திறந்த கடிதம் அங்குள்ள பத்திரிகைகளில் முழுவதுமாக வெளியிடப்பட்டது.

அமெரிக்க அரசுக்கும், அரசுத் துறைகளுக்கும் எதிராக பல பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், கடிதங்களும் எழுதியிருக்கிறேன். அமெரிக்கா ஈராக் நாட்டின் மீது படையெடுத்தபோது, எங்கள் பல்கலைக்கழக “அரசியல் அறிவியல்” துறையின் (Political Science Department) சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் திரட்டி, நான் எழுதிய ஒரு கண்டனத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றச் செய்தேன். பிரான்சு நாடு பசிபிக் தீவுகளருகே அணுவாயுதப் பரிசோதனைகள் நடத்தியபோது, அதையும் அமெரிக்க அரசின் ஆதரவு நிலையையும் இயன்ற வழிகளிளெல்லாம் எதிர்த்தேன்.

நான் கற்பித்த வகுப்புக்களிலெல்லாம், பேசிய கருத்தரங்குகளிலெல்லாம், எழுதிய பத்திரிகைகளிலெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அமெரிக்க அரசுக்கு எதிராக, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக, முதலாளித்துவத்துக்கு எதிராகத்தான் பேசியிருக்கிறேன், எழுதியிருக்கிறேன். என்னைப் பற்றி CIA, FBI (Federal Bureau of Investigation) போன்ற அமெரிக்க அரசின் உளவு நிறுவனங்கள் தகவல்கள் சேகரிப்பதாகக்கூட நண்பர்கள் என்னை எச்சரித்தனர். இதுதான் “அமெரிக்கக் கைக்கூலி”யான எனக்கும் “அமெரிக்கா”வுக்கும் உள்ள தொடர்பு.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 3, 2013

சிலம்பம் வரலாறு

  



சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.


மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய]] முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.


கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.

சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை , மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது.

நரசிம்மர்- இரணியன் சண்டை - பழையறை "சோமநாத சாமி" கோயில்



"ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்றா" பாக்குறியா? என்ற இந்த உணர்ச்சிமிகு வசனத்தை கூற நம் சினிமா கதாநாயகன் எத்தனை முறை டேக் வாங்கி இருப்பார்?, அது போக அந்த காட்சியை படமாக எப்படியும் அதிநவீன ஒளிப்பதிவு சாதனங்கள், வெளிச்சம் போன்றவற்றை பயன்படுத்தி தானே அந்த காட்சியை படமாக்கி இருப்பார்கள். இவற்றை பெரிய அளவில் நாம் பேசுகிறோம், தவறில்லை அதுவும் உழைப்பு தான்.


பழையறை "சோமநாத சாமி" கோயிலில் இருக்கும் இந்த சிற்பம் "நரசிம்மர்- இரணியன் சண்டை" குறித்தது. கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? அப்படியானால் இந்த தூணிலும் இருக்கிறாரா? என்று அகங்காரத்துடன் இரணியன் பேசிக்கொண்டிருக்கும் போதே தூணை கிழுத்துக்கொண்டு வெளியில் வந்த நரசிம்மர், அவனின் வயிற்றை தன் மடி மீது வைத்து ஆக்ரோஷமாக கிழிக்கிறார், அதற்கு முன் நடந்த சண்டை காட்சி தான் இது. 

நரசிம்மர் முகத்தை மட்டும் கொஞ்சம் உற்று நோக்குங்கள், அவர் கடும் கோபத்துடன் இருக்கிறார் என்பதை சிற்பி எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார். சிங்க முகத்துடன் அவர் வாய் திறந்து கர்ஜிப்பதும், கண்கள் கோபத்தின் உச்சத்தில் இருப்பதும்..அடடா..அதுவும் கல்லில்!

நரசிம்மரிடம் இரணியன் சிக்கிகொண்டான் இனி அவன் தப்பிக்கவே முடியாது என்பதை காட்ட சிற்பி கையாண்டிருக்கும் யுத்தியை பாருங்கள்!."மாட்டினடா மவனே இனி நீ தப்பிக்கவே முடியாது" என்பதை போல் நரசிம்மர் தன் கால்களால் இரணியனின் கால்களை பிணைத்திருக்கும் இடத்தில் சிற்பி செய்திருக்கும் வித்தை என்னவென்று கூறுவது!.

இரணியன் தளர்ந்து விட்டான், என்பதை காட்ட அவனின் உடம்பு நரசிம்மரை நோக்கி முன்னோக்கி வந்துவிட்டது, கைகள் தளர்ந்த நிலையில் பின்னால் காட்டப்பட்டுள்ளது!

இடது கையால் இரணியனின் தலையை இழுத்துப் பிடுத்துக்கொண்டு, (அப்படி பிடித்திருக்கையிலேயே அவன் தலை அவரின் கைகளில் வந்து விடும் போலிருக்கின்றது) வலது கையை ஓங்கி வைத்திருக்கும் காட்சியை பார்த்தால் உங்களுக்கு என்ன வசனம் நினைவிற்கு வருகின்றது.

இந்த சிற்பம் செய்யப்பட்டு எப்படியும் ஆயிரம் வருடங்கள் இருக்கும், அந்த சிற்பி அன்றைக்கு கொடுத்த அதே உணர்சிகள் தான் இந்த 2013 ஆம் ஆண்டிலும் நாம் உணர்கிறோம். ஆயிரம் வருடங்களுக்கு முன், எந்த வித தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத கால கட்டத்தில் வெறும் சுத்தியலும் உளியையும் மட்டுமே வைத்துக்கொண்டு, இரண்டாவது டேக்'கிற்கு கூட செல்லாமல் இவ்வளவு உணர்சிகளை கல்லில் கொண்டு வர முடியுமென்றால்....

சினிமாவிற்கு தரும் முக்கியத்துவத்தை ஆயிரம் வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட சிற்பங்களுக்கும் கொஞ்சம் கொடுங்களேன்..ப்ளீஸ் 

குடவரைக் கோயில் - மகேந்திர வர்மர் - விசித்திர சித்தன்

                                                          Sasi Dharan - பயணங்களில் 
  •      இடைப்பட்ட எந்த நாட்களிலும் இல்லாத மழை, நாங்கள் புறப்படும் ஞாயிறுகளில் மட்டும் வந்து பயணத்தை கெடுக்காத வகையில் லேசாக பெய்து, செல்லும் இடங்களை பசுமையாக்கி, கண்களையும் மனதையும் குளுமையாக்கி, பயணத்தையும் புகைப்படங்களையும் அழகானதாக்கும் மழைத் தோழனுக்கு எங்கள் நன்றிகள். நண்பர் ரமேஷ், நண்பர் மாணிக் ராஜேந்திரன் மற்றும் தோழி ஒருவருடன் மழையும் இணைந்துகொள்ள காலையிலேயே கலைகட்டியது பயணம், தமிழகத்தின் முதல் (?) குடவரைக் கோயிலை காண்பது என்று முடிவு செய்து சென்னையிலிருந்து நேராக விழுப்புரம் நோக்கி பயணித்தோம். "ஓவர் டு ப்ளாக் அண்ட் ஒயிட்".
                   

    வருடம் 598, ஐப்பசி மாதம், அந்த இரவு நல்ல மழை பெய்துகொண்டிருந்தது, மகேந்திர பல்லவனுக்கு சரியான உறக்கமில்லை, அரண்மனைக்கு நேர் எதிரில் இருக்கும் அந்த கோயிலை பார்த்துகொண்டே முற்றத்தில் உலவிக்கொண்டிருந்தார். ஏதோ தவறு நடக்கப் போவதாக உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருந்தது, அதை தடுக்க முடியாது என்பதையும் அவர் அறிந்திருந்தார், யோசித்துக்கொண்டே இருக்கையில், கண் இமைக்கும் நேரத்தில் அந்த பயங்கர சம்பவம் நடந்து முடிந்தது, ஆம், செங்கற்களால் கட்டப்பட்டிருந்த அந்த நூறு வருடம் கடந்த பழமையான கோயில் அந்த பெருமழைக்கு தாங்காமல், அவர் கண் முன்னே இடிந்து மழையில் கரைந்துகொண்டிருந்தது. மிகுந்த மனவேதனை, அன்று இரவு முழுவதும் அவருக்கு தூக்கமில்லை, விடியற்காலை முதல் வேலையாக அரசவைக் கூட்டி மந்திரிகளோடும், சிற்பிகளோடும் ஆலோசிக்கிறார், நான் சமீபத்தில் தான் சைவ சமயத்திற்கு வந்திருக்கிறேன், இதுவரை யாரும் செய்யாத ஒன்றை என் சிவனுக்காக நான் செய்ய வேண்டும், நாம் அவருக்காக எடுக்கும் கோயில்கள் அனைத்தும் பல நூறு வருடங்களை கடக்க வேண்டும், புதிதாக ஏதேனும் நாம் முயற்சிக்க வேண்டும்! இதுவரை யாரும் இங்கு இவற்றை செய்த ஒன்றாக அவை இருக்கக்கூடாது, என்ன செய்யலாம்? கேள்வியை சபை முன்பு வைத்துவிட்டு அமைதியானார் மகேந்திரன்.      
    சபை தீவிரமாக யோசித்தது, வெகு நேரம் ஆகியும் பதில் இல்லை, சபையின் மௌனம் மகேந்திரருக்கு மேலும் வருத்தத்தை கூட்டியது, நீண்ட யோசனைக்கு பிறகு, சரி நானே ஒரு யோசனையைக் கூறுகிறேன், நம் நாட்டு சிற்பிகள் ஐம்பது பேரை, ஐந்து நபர் கொண்ட குழுவாக பத்து பிரிவுகளாக மலைகளை நோக்கி நாளையே பயணப்படட்டும், அவர்களின் முதன்மையான பணி, "கல்லை குடைந்து கோயிலை செய்யும் படி ஏதுவான பெரிய பாறைகளை தேர்ந்துப்பது தான்" இந்த உத்தரவு மந்திரிகளுக்கு அதிர்ச்சி அளித்தது, கல்லைக் குடைவதா? அது எப்படி சாத்தியம்? வட நாட்டில் இருப்பதை போன்று நம் பாறைகள் மெலிதானவை அல்லவே! இவை அனைத்தும் முரட்டுப் பாறைகள், இவற்றை குடைவது என்பது... " என்று மந்திரி ஒருவர் மேலும் பேச முற்பட.."போதும், இது என் உத்தரவு," என்று ஒரே வார்த்தையில் முடித்தார் மகேந்திரன், அடுத்த நாளே சிற்பிகளின் குழு மலைகளை நோக்கி பயணப்பட்டது, பல நாட்கள் பயணித்து, பல பாறைகளின் மீதேறி, பல குன்றுகளைக் கடந்து, ஒரு இடத்தை தேர்வு செய்து மன்னருக்கு செய்தி அனுப்பியது ஒரு குழு, மற்ற குழுக்களை திரும்ப வரச்சொல்லிவிடலாமா? என்று மந்திரி வினவ, இல்லை அவர்கள் தேடட்டும், சிவன் எல்லா இடங்களிலும் நிறைய வேண்டும்.
                       
    சிற்பிகள் தேர்ந்தெடுத்த அந்த குறிப்பிட்ட பாறையை காண மகேந்திர வர்மன் மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த நாளே புறப்பட்டு அந்த இடத்திற்கு வந்தார், சுற்றிலும் எழில் சார்ந்த மலை, எதிரில் நீர் தடாகம், இந்த காட்சிகள் அவர் மனதிற்கு இதமளித்தது, அஹா, அற்புதம்..என் அருமை சிற்பிகளே நீங்கள் இதுவரை செய்யாத ஒன்றை இங்கு முயற்சிக்கவிருக்கிறீர்கள், இந்த பணி பல மாதங்களுக்கு நீளும் என்பது எனக்கு தெரியும், இந்த பெரும் பாறைகளை குடையும் போது, துகள்கள் தெறித்து கண்கள் கூட குருடாகலாம், சிரமத்தை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு வேளை இந்த பணியை நாம் முடித்துவிட்டால், மழையாவது, புயலாவது, இந்த பூமியில் சந்திர சூரியன் உள்ளவரை நம் கோயில்கள் அழியாது என்று கண்ணில் பரவசம் போனகம் உற்சாகமாக பேசினார் மகேந்திரன் .

    ஒரு பக்கம் கலக்கமாக இருந்தாலும், மன்னரின் உத்தரவை மீறவா முடியும்? அடுத்த ஒரு சில நாட்களில், இது வரை யாரும் முயற்சிக்காத செயலை சிற்பிகள் அரங்கேற்றத் துவங்கினர், பாறைகளை சதுரம் சதுரமாக வெட்டி, கொஞ்சம் கொஞ்சமாக குடைந்து பல மாத போராட்டங்களுக்கு பிறகு, பெரும் சிரமங்களை கடந்து, தன் மன்னன் விரும்பிய அந்த கோயிலை பல்லவ சிற்பிகள் அவருக்காக முடித்துக்கொடுத்தனர். கோயிலில் மொத்தம் மூன்று கருவறைகள், ஒன்று பிரம்மாவிற்கு, மற்றொன்று விஷ்ணுவிற்கு, அடுத்து சிவனுக்கு, அது மட்டுமா? யாரும் செய்ய முடியாத ஒன்றை தன் மன்னன் முடித்து விட்டான் என்பதால் அவரை "விசித்திர சித்தன்" என்று பெருமையுடன் கற்களில் பொறித்தனர். 
    இந்த கதை என் கற்பனையில் உருவானது தான், ஆனால் முதன் முதலில் "செங்கல்,மண், உலோகம்,மரம்" இவை இல்லாமல் "பிரம்மா, விஷ்ணு, சிவனுக்காக ஒரு கோயிலை விசித்திர சித்தனாகிய நான் எழுப்பி இருக்கிறேன் என்று ஆசை ஆசையாக, பெருமையாக கூறும் "மகேந்திர வர்மரின்" கல்வெட்டுகளை இன்றும் நீங்கள் செஞ்சிக்கு அருகே இருக்கும் "மண்டகப்பட்டு" என்ற குடவரைக் கோயிலில் தொட்டுத் தடவிப் பார்க்கலாம். அது என்ன சாதாரண கல்வெட்டா?, அல்ல, 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனின் மனக் கண்ணாடி, தமிழகத்தில் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கட்டப்போகும் 40,000 மேற்பட்ட கற்கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அடித்தளம்.

    1400 வருடங்களுக்கு முன் புதிய ஒரு முயற்சியாக பாறையை கொண்டு குடைந்த அந்த குடவரைக் கோயிலை காணச் செல்லுங்கள். மதேந்திர பல்லவன், அவர் கோயிலை காண வருவோரை கண்ணுக்குத் தெரியாத காற்றாக இருந்து, இன்றும் நம்மை வரவேற்றுக்கொண்டிருக்கிறார்.        
    நன்றி - Sasi Dharan 





 

Like ME

Sample Text

Sample Text