"ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்றா" பாக்குறியா? என்ற இந்த உணர்ச்சிமிகு வசனத்தை கூற நம் சினிமா கதாநாயகன் எத்தனை முறை டேக் வாங்கி இருப்பார்?, அது போக அந்த காட்சியை படமாக எப்படியும் அதிநவீன ஒளிப்பதிவு சாதனங்கள், வெளிச்சம் போன்றவற்றை பயன்படுத்தி தானே அந்த காட்சியை படமாக்கி இருப்பார்கள். இவற்றை பெரிய அளவில் நாம் பேசுகிறோம், தவறில்லை அதுவும் உழைப்பு தான்.

பழையறை "சோமநாத சாமி" கோயிலில் இருக்கும் இந்த சிற்பம் "நரசிம்மர்- இரணியன் சண்டை" குறித்தது. கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? அப்படியானால் இந்த தூணிலும் இருக்கிறாரா? என்று அகங்காரத்துடன் இரணியன் பேசிக்கொண்டிருக்கும் போதே தூணை கிழுத்துக்கொண்டு வெளியில் வந்த நரசிம்மர், அவனின் வயிற்றை தன் மடி மீது வைத்து ஆக்ரோஷமாக கிழிக்கிறார், அதற்கு முன் நடந்த சண்டை காட்சி தான் இது.
நரசிம்மர் முகத்தை மட்டும் கொஞ்சம் உற்று நோக்குங்கள், அவர் கடும் கோபத்துடன் இருக்கிறார் என்பதை சிற்பி எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார். சிங்க முகத்துடன் அவர் வாய் திறந்து கர்ஜிப்பதும், கண்கள் கோபத்தின் உச்சத்தில் இருப்பதும்..அடடா..அதுவும் கல்லில்!
நரசிம்மரிடம் இரணியன் சிக்கிகொண்டான் இனி அவன் தப்பிக்கவே முடியாது என்பதை காட்ட சிற்பி கையாண்டிருக்கும் யுத்தியை பாருங்கள்!."மாட்டினடா மவனே இனி நீ தப்பிக்கவே முடியாது" என்பதை போல் நரசிம்மர் தன் கால்களால் இரணியனின் கால்களை பிணைத்திருக்கும் இடத்தில் சிற்பி செய்திருக்கும் வித்தை என்னவென்று கூறுவது!.
இரணியன் தளர்ந்து விட்டான், என்பதை காட்ட அவனின் உடம்பு நரசிம்மரை நோக்கி முன்னோக்கி வந்துவிட்டது, கைகள் தளர்ந்த நிலையில் பின்னால் காட்டப்பட்டுள்ளது!
இடது கையால் இரணியனின் தலையை இழுத்துப் பிடுத்துக்கொண்டு, (அப்படி பிடித்திருக்கையிலேயே அவன் தலை அவரின் கைகளில் வந்து விடும் போலிருக்கின்றது) வலது கையை ஓங்கி வைத்திருக்கும் காட்சியை பார்த்தால் உங்களுக்கு என்ன வசனம் நினைவிற்கு வருகின்றது.
இந்த சிற்பம் செய்யப்பட்டு எப்படியும் ஆயிரம் வருடங்கள் இருக்கும், அந்த சிற்பி அன்றைக்கு கொடுத்த அதே உணர்சிகள் தான் இந்த 2013 ஆம் ஆண்டிலும் நாம் உணர்கிறோம். ஆயிரம் வருடங்களுக்கு முன், எந்த வித தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத கால கட்டத்தில் வெறும் சுத்தியலும் உளியையும் மட்டுமே வைத்துக்கொண்டு, இரண்டாவது டேக்'கிற்கு கூட செல்லாமல் இவ்வளவு உணர்சிகளை கல்லில் கொண்டு வர முடியுமென்றால்....
சினிமாவிற்கு தரும் முக்கியத்துவத்தை ஆயிரம் வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட சிற்பங்களுக்கும் கொஞ்சம் கொடுங்களேன்..ப்ளீஸ்
No comments:
Post a Comment