Tuesday, December 3, 2013

எனக்கும் “அமெரிக்கா”வுக்கும் உள்ள தொடர்பு - சுப. உதயகுமாரன்




                     
கடந்த 1989 முதல் 2001 வரை சுமார் 12 ஆண்டுகள் நான் கல்லூரி மாணவனாக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, ஆய்வாளராக, வருகைதரு பேராசிரியராக அமெரிக்காவிலே வாழ்ந்தேன், பணியாற்றினேன். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகும், ஆண்டுதோறும் கோடை காலத்தில் அங்கே சென்று வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினேன், இடிந்தகரைக்கு வரும் வரை.

நோட்ரே டேம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் சர்வதேச சமாதானம் பற்றிய முதுகலை பட்டப்படிப்பு படிக்கும்போது, ஆசிரியர்களிடம் “வெறும் விழுமியங்களை மட்டும் படித்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்; எங்களுக்கு யதார்த்த வழிமுறைகளும் தெரிந்திருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்து, மாணவர்களுக்குள் Political Action Committee (PAC) என ஒன்றைத் துவங்கலாம் என முன்மொழிந்து, எனது நெருங்கியத் தோழர்கள் சிலரோடு சேர்ந்து அதைத் துவக்கினேன். தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்திய அராஜகங்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக சாலை மறியல் உட்பட பல போராட்டங்கள் நடத்தினோம். வறுமைக்கு எதிராக, வறுமையில் வாடும் மக்களின் வேதனைகளை அமெரிக்க மக்கள் கண்முன் நிறுத்த மூன்று நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் PAC குழுவினர் உண்ணாவிரதம் இருந்தோம்.

பின்னர் ஹவாய் (Hawai’i) பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். எங்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர் அலுவலகத்தில் (International Students Center) வைத்து CIA (Central Intelligence Agency) எனும் கொடிய அமெரிக்க உளவுத்துறைக்கு ஆள்சேர்க்கும் முயற்சி நடந்தபோது, நானும் பல சர்வதேச மாணவர்களும் அந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த அலுவலகத்தின் முன்பாகவே, எங்கள் அதிகாரி ஜூன் நாட்டன் போராட்டம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதையும் புறக்கணித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (தந்தை) எங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது, எனது வகுப்புத் தோழி சாரா கிலியட்டும் நானும் “அதிபரை கண்ணால் பார்க்க மாட்டோம்” என்று அறிவித்து, அவரது நிகழ்வு நடந்த ஜெஃபர்சன் ஹாலுக்கு (Jefferson Hall) முன்னர் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தோம். அடுத்த நாள் நாளிதழ்களிலெல்லாம் முன்பக்கத்தில் எங்கள் படமும் போராட்டச் செய்தியும் வெளியாயின.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், காலனி ஆதிக்கத்தும் எதிராக ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுத்து, தமது இறையாண்மைக்காக ஹவாய் பூர்வக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களது போராட்டங்கள் பலவற்றில் நானும் பங்கேற்றேன்; ஒரு சாலையோரப் போராட்டத்தில் கலந்துகொண்டபோது, Honolulu Advertiser நாளிதழின் முன்பக்கத்தில் நான் பதாகையோடு நிற்கும் படத்தை பிரசுரித்து, வெளிநாட்டு மாணவர்கள்கூட உள்ளூர் மக்களை ஆதரிக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவாக முன்னணி நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். அதேபோல சில கோரிக்கைகளுக்காக ஹவாய் பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு போராடியபோது, அப்போதைய ஹவாய் மாநில ஆளுநர் திரு. பெஞ்சமின் கயட்டானோவுக்கு நான் எழுதிய திறந்த கடிதம் அங்குள்ள பத்திரிகைகளில் முழுவதுமாக வெளியிடப்பட்டது.

அமெரிக்க அரசுக்கும், அரசுத் துறைகளுக்கும் எதிராக பல பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், கடிதங்களும் எழுதியிருக்கிறேன். அமெரிக்கா ஈராக் நாட்டின் மீது படையெடுத்தபோது, எங்கள் பல்கலைக்கழக “அரசியல் அறிவியல்” துறையின் (Political Science Department) சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் திரட்டி, நான் எழுதிய ஒரு கண்டனத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றச் செய்தேன். பிரான்சு நாடு பசிபிக் தீவுகளருகே அணுவாயுதப் பரிசோதனைகள் நடத்தியபோது, அதையும் அமெரிக்க அரசின் ஆதரவு நிலையையும் இயன்ற வழிகளிளெல்லாம் எதிர்த்தேன்.

நான் கற்பித்த வகுப்புக்களிலெல்லாம், பேசிய கருத்தரங்குகளிலெல்லாம், எழுதிய பத்திரிகைகளிலெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அமெரிக்க அரசுக்கு எதிராக, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக, முதலாளித்துவத்துக்கு எதிராகத்தான் பேசியிருக்கிறேன், எழுதியிருக்கிறேன். என்னைப் பற்றி CIA, FBI (Federal Bureau of Investigation) போன்ற அமெரிக்க அரசின் உளவு நிறுவனங்கள் தகவல்கள் சேகரிப்பதாகக்கூட நண்பர்கள் என்னை எச்சரித்தனர். இதுதான் “அமெரிக்கக் கைக்கூலி”யான எனக்கும் “அமெரிக்கா”வுக்கும் உள்ள தொடர்பு.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 3, 2013

No comments:

Post a Comment

 

Like ME

Sample Text

Sample Text