சிற்பிகள் தேர்ந்தெடுத்த அந்த குறிப்பிட்ட பாறையை காண மகேந்திர வர்மன் மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த நாளே புறப்பட்டு அந்த இடத்திற்கு வந்தார், சுற்றிலும் எழில் சார்ந்த மலை, எதிரில் நீர் தடாகம், இந்த காட்சிகள் அவர் மனதிற்கு இதமளித்தது, அஹா, அற்புதம்..என் அருமை சிற்பிகளே நீங்கள் இதுவரை செய்யாத ஒன்றை இங்கு முயற்சிக்கவிருக்கிறீர்கள், இந்த பணி பல மாதங்களுக்கு நீளும் என்பது எனக்கு தெரியும், இந்த பெரும் பாறைகளை குடையும் போது, துகள்கள் தெறித்து கண்கள் கூட குருடாகலாம், சிரமத்தை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு வேளை இந்த பணியை நாம் முடித்துவிட்டால், மழையாவது, புயலாவது, இந்த பூமியில் சந்திர சூரியன் உள்ளவரை நம் கோயில்கள் அழியாது என்று கண்ணில் பரவசம் போனகம் உற்சாகமாக பேசினார் மகேந்திரன் .
ஒரு பக்கம் கலக்கமாக இருந்தாலும், மன்னரின் உத்தரவை மீறவா முடியும்? அடுத்த ஒரு சில நாட்களில், இது வரை யாரும் முயற்சிக்காத செயலை சிற்பிகள் அரங்கேற்றத் துவங்கினர், பாறைகளை சதுரம் சதுரமாக வெட்டி, கொஞ்சம் கொஞ்சமாக குடைந்து பல மாத போராட்டங்களுக்கு பிறகு, பெரும் சிரமங்களை கடந்து, தன் மன்னன் விரும்பிய அந்த கோயிலை பல்லவ சிற்பிகள் அவருக்காக முடித்துக்கொடுத்தனர். கோயிலில் மொத்தம் மூன்று கருவறைகள், ஒன்று பிரம்மாவிற்கு, மற்றொன்று விஷ்ணுவிற்கு, அடுத்து சிவனுக்கு, அது மட்டுமா? யாரும் செய்ய முடியாத ஒன்றை தன் மன்னன் முடித்து விட்டான் என்பதால் அவரை "விசித்திர சித்தன்" என்று பெருமையுடன் கற்களில் பொறித்தனர்.

இந்த கதை என் கற்பனையில் உருவானது தான், ஆனால் முதன் முதலில் "செங்கல்,மண், உலோகம்,மரம்" இவை இல்லாமல் "பிரம்மா, விஷ்ணு, சிவனுக்காக ஒரு கோயிலை விசித்திர சித்தனாகிய நான் எழுப்பி இருக்கிறேன் என்று ஆசை ஆசையாக, பெருமையாக கூறும் "மகேந்திர வர்மரின்" கல்வெட்டுகளை இன்றும் நீங்கள் செஞ்சிக்கு அருகே இருக்கும் "மண்டகப்பட்டு" என்ற குடவரைக் கோயிலில் தொட்டுத் தடவிப் பார்க்கலாம். அது என்ன சாதாரண கல்வெட்டா?, அல்ல, 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனின் மனக் கண்ணாடி, தமிழகத்தில் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கட்டப்போகும் 40,000 மேற்பட்ட கற்கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அடித்தளம்.
1400 வருடங்களுக்கு முன் புதிய ஒரு முயற்சியாக பாறையை கொண்டு குடைந்த அந்த குடவரைக் கோயிலை காணச் செல்லுங்கள். மதேந்திர பல்லவன், அவர் கோயிலை காண வருவோரை கண்ணுக்குத் தெரியாத காற்றாக இருந்து, இன்றும் நம்மை வரவேற்றுக்கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment