குற்றச்சாட்டு [1]: தேசத் துரோகி!
இந்திய, தமிழக ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் என்னையும், அணுசக்திக்கு எதிராகப் போராடிவரும் எனது தோழர்களையும் பலவாறாகப் பழித்து வருகிறது. எங்கள் மீது சுமத்தப்படும் முக்கியமான குற்றச்சாட்டு நாங்கள் தேசத் துரோகிகள்.

இதில் முக்கியமான கேள்வி: இங்கே தேசம் என்று குறிப்பிடப்படுவது எது? சாதி-மத வெறி பிடித்த, ஊழல் மிகுந்த, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்குத் தூக்கும், முதலாளித்துவ, மக்கள் விரோத, இயற்கையைக் கொல்லும், இயன்றதையெல்லாம் விற்றுப் பிழைக்கும் ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம்தான் தேசம் என்றால், ஆம், நான் தேசத் துரோகிதான். தேசத் துரோகியாக வாழ்வதற்குப் பெருமைப்படுகிறேன். சாவது வரை தேசத் துரோகியாகவே வாழ விரும்புகிறேன், வாழ்வேன்.
“கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென அறிவுமிலார்” என்று பாரதி கவலைப்படுகிற பாமர, சக்தியற்ற, சாமான்ய, சாதாரண மக்கள்தான் தேசம் என்றால், அவர்களுக்கெதிரான அமைப்பை தூக்கி எறியும் தேசத் துரோகியாக வாழ விரும்புகிறேன்.
எனது 21-வது வயதிலேயே இந்தியா எனும் தேசத்தின் பிரதிநிதியாக, தூதுவராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அடுத்த இருபது வருடங்களில் சுமார் 30 நாடுகளில் பல்வேறு பள்ளிக்கூடங்களில், பல்கலைக்கழகங்களில், அலுவலகங்களில், ஆன்றோர் கூடும் சபைகளில், ஐ.நா. மன்றத்தில், சான்றோர் சந்திக்கும் மாநாடுகளில், மக்கள் மன்றங்களில் இந்த தேசத்தின் பெயரை, பெருமையை, பெரும்புகழை உயர்த்திப் பிடித்திருக்கிறேன். என்னால் என் தேசம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த விதத்திலும் சிறுமையடைந்துவிடக் கூடாது, சிரிப்புக்கிடமாகிவிடக் கூடாது என்று கவனமாக, கடமை தவறாது, கண்ணியத்தோடு, கட்டுப்பாட்டோடு வாழ்ந்திருக்கிறேன்.
இன்று நம் மக்கள் தங்கள் வாழ்வை, வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை, வரவிருக்கும் சந்ததிகளை இழந்துவிடக் கூடாது என்று என் தோழர்களோடு எழுந்து நிற்கிறேன். எங்களுக்குத் தரப்படும் பட்டம்: தேசத் துரோகி! ஒரே ஒரு கேள்வி: எங்கள் தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 2, 2013
No comments:
Post a Comment