Tuesday, September 24, 2013

ஹிந்திய பயங்கரவாதிகளினால் திலீபன் அண்ணாவை இழந்து விடுவோமா என்ற அச்சத்தில் 9ம் நாள்....


ஹிந்திய பயங்கரவாதிகளினால் திலீபன் அண்ணாவை இழந்து விடுவோமா என்ற அச்சத்தில் 9ம் நாள்..

   
1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 23ம் திகதி இது திலீபனுடன் 9ம் நாள். அதிகாலை 5 மணியிருக்கும் கிழக்குப்பக்கத்திலே தேர் முட்டி வாசலில் நின்றிருந்த வேப்பமரத்திலிருந்து குயில் ஒன்று கூவிக்கொண்டிருந்தது. அதன் குரலிர் ஒலித்த விரக்தியின் சாயலை கேட்ட நான் திலீபனை ஏக்கத்துடன் பார்த்தேன். அந்தக்குயில் எதை இழந்து இப்படிக்கூவுகிறதோ தெரியவில்லை ஆனால் இந்தக்குயில் எம்மை எம் இனத்தைக்காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே இந்தக்குயிலின் சோக கீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை. திலீபனை நன்றாக உற்றுப்பார்க்கிறேன்.
அவரின் உடலிலுள்ள சகல உறுப்புக்களும் இன்று செயலற்றுக்கொண்டிருக்கின்றன உதடுகள் அசைகின்றன ஆனால் சத்தம் வெளிவரவில்லை. உதடுகள் பாளம்பாளமாக வெடித்து வெளிருற்று இருந்தன. கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன. இன்று காலை 8.30 மணியிலிருந்து யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 17 பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்து கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை 9 மணியளவில் யாழ் கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்த இந்திய படையினர்வெளியே வராதவாறு மறியல் செய்யத்தொடங்கினர். பொதவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்த வந்த அதே வேளை பொதுமக்களின் குமுறல்களும் அதிகரித்ததை புரிந்து கொள்ள முடிந்தது.
திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இன்று காலை இந்தியப்படையின் தென்பிராந்தியத்தளபதி லெப்.ஜெனரல். திபேந்திர சிங் அவர்கள் கெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்து இறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர்.
1 மணி நேரத்திற்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான். கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக்கணக்காண மக்களின் எழுச்சியை கண்ட பின்னர்தான் தளபதி அவர்கள தலைவர் பிரபாகரனை காண பறந்து வந்திருக்கவேண்டும். திலிபனின் 5 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள் பிரதமர் ராஜுவ்காந்திக்கு மகஜர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்திய தூதுவர் டிக்சிற் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பதுதான் அது. ஆம் பிற்பகல் 1.30 மணியிலிருந்த பிற்பகல் 6.30 மணி வரை இரு குழுக்களும் அமைதியாக பேச்சு வார்த்தையை நடாத்தின. இந்தியத்தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தூதவர் டிக்சிற், இந்திப்படையின் தென்பிராந்தியத்தளபதி லெப். ஜெனரல் திபேந்திர சிங், அமைதி காக்கும் படைத்தளபதி மேஜர் ஜெனரல் கர்க்கிற்சிங், பிரிகேடியர் பெர்ணான்டஸ், இந்திய தூதரக பாதுகாப்பு அதிகாரி கப்டன் குப்தா.
விடுதலைப்புலிகளின் தரப்பில் தலைவர் பிரபாகரனுடன், திரு.அன்ரன் பாலசிங்கம், வழக்கறிஞர் திரு. கோடீஸ்வரன், திரு. சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக செய்தி வந்ததுமே என்னையறியாமலே என் மனம் துள்ளிக்குதித்தது. 9ம் நாளான இன்று எப்படியும் நல்ல முடிவு ஏற்படும் அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக யாழ் பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சை பிரிவில் விசேட சிகிச்சை அளிக்கவேண்டும் எமக்காக இத்தனை நாட்களாக துன்பப்பட்டு அணுஅணுவாக தன்னை வருத்திக்கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம் நிச்சயமாக பூத்துக்குலுங்கத்தான் போகிறது என்ற கற்பனைக்கடலில் இரவு 7.30 மணி வரை நானும் எனது நண்பர்களும் மிதந்து கொண்டிருந்தோம்.
இரவு 7.30 மணிக்கு அந்த செய்தி என் காதில் வந்து விழுந்த போது இந்த உலகமே தலை கீழாக சுற்றத்தொடங்கியது. அந்தக்கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்ந்து தவிடுபொடியாகியது. ஆம் பேச்சுவார்த்தையின் போது இந்தியத்தூதுவரால் வெறும் உறுதிமொழிகளை மட்டுந்தான் தர முடிந்தது. திலீபனின் உண்ணாவிரத போராட்டம் ஓர் தொடர்கதையாகவே ஆகிவிட்டது.எழுத்தில் எந்தவித உறுதி மொழிகளும் இந்தியத்தரப்பு தர விரும்பவில்லை என்பதை அவர்கள் நடத்தை உறுதிசெய்தது. திலீபனின் மரணம் பயணம் இறுதியானது என்பதையு11ம் அது உணர்த்தியது

கவிஞர் மு.வா.யோ

தமிழ்நாடு விடுதலையை முன்வைத்தபோதுதான் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார் _ வீரப்பன்


ஹிந்திய ரா பயங்கரவாதிகளின் விடுதலைப் போராட்டங்களை அடக்கும் பயங்கரவாதம்... 

• வீரப்பன்

யானைத்தந்தம் கடத்தியபோது கொல்லப்படவில்லை.சந்தணக்கட்டை கடத்தியபோது கொல்லப்படவில்லை.
தமிழ்நாடு விடுதலையை முன்வைத்த பின்பே நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்.

                                     

இந்திய உளவுப்படையானது இந்தியாவுக்குள் மட்டுமல்ல இந்தியாவுக்கு வெளியிலும் கொலைகள் செய்கிறது என்பதற்கு தோழர் நெப்போலியன் கொலையை கடந்த பதிவுகளில் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் எனவே உளவுப்படைகளும் சட்டப்படியே செயற்படும் என்றும் பலர் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அமெரிக்க சி.ஜ.ஏ மற்றும் ரஸ்சிய கே.ஜி.பி இஸ்ரவேலின் மொசாட் போன்று மிகவும் மோசமான பயங்கரமான உளவுப்படையாகும்.

இந்த உளவுப்படைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் எவ்வளவு? அவர்களின் செயற்பாடு என்ன? போன்றன குறித்து பாராளுமன்றத்தில் கூட கேட்க முடியாது. அந்தளவிற்கு அவர்களின் அனைத்து செயற்பாடுகளும் இரகசியமாக வைக்கப்படுகிறது. அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் நீதி, நியாயம், சட்டம் எது குறித்தும் அக்கறையின்றி மிகக்கொடிய கிரிமினல்களாக வலம் வருகின்றனர்.

வங்கதேச விடுதலையின் போது முக்திபாணி என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு பயிற்சி ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்தது. பின்னர் வங்கதேசம் விடுதலையடைந்ததும் இந்திய அரசு செய்த முதல் வேலை தான் பயிற்சி கொடுத்த அத்தனை போராளிகளையும் இரகசியமாக கொன்றதுதான். இதனையே புளட் அமைப்பினர் “வங்க தந்த பாடம்” என்று பிரசுரம் அடித்து வெளியிட்டனர். ஆனால் பின்னர் இது இந்திய அரசுக்கு தெரிந்து விட்டது என்றதும் அத்தனை பிரதிகளும் தீயிட்டு அழித்தார்கள். இந்த “வங்க தந்த பாடம்” பிரசுர வெளியீட்டுக்கு உழைத்த சந்தியார் பின்னர் இந்திய உளவுப்படையின் ஆசியுடன் புளட் தலைமைப்பீடத்தினால் சென்னையில் வைத்துக் கொல்லப்பட்டார்.

புலவர் கலியபெருமாள் தன் இறுதிக்காலங்களில் தனது தலைவராக சந்தன வீரப்பன் அவர்களைக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டு சேகுவாரா என்று அழைக்கபட்ட கலியபெருமாள் வீரப்பனை தன் தலைவர் என்று குறிப்பிட்டமைக்கு காரணம் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன் வைத்தமையே.

அதேபோல் வீரப்பன் யானைத் தந்தம் கடத்தியபோது கொல்லப்படவில்லை. சந்தணக் கட்டைகளை கடத்தியபோது கொல்லப்படவில்லை. மாறாக தமிழ்நாடு விடுதலையை முன்வைத்தபோதுதான் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்.

இதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியது என்னவெனில் தமிழ் மக்களின் விடுதலைக்காக யார் முயற்சி செய்தாலும் அவர்களை இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் கொன்று அழிப்பதற்கு தயங்காது என்பதே.

இந்திய அரசு ஈழப் போராளிகளுக்கு நிறைய உதவி செய்ததாகவும் ராஜீவ் கொலைக்கு பின்னரே அது உதவிகளை நிறுத்தியதாகவும் இன்றும் கூட சில இந்திய விசுவாசிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது தவறு. ஆரம்பம் முதலே இந்திய அரசும் அதன் உளவுப் படைகளும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியே வந்திருக்கின்றது. அதுதான் உண்மை வரலாறு ஆகும்.

-பாலன் தோழர்

ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா? - பிரகதீஸ்வர தென்திசை மேரு!

   


அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.

- எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

Saturday, September 21, 2013

தீரர் சத்தியமூர்த்தியும் - பெருந்தலைவர் காமராஜரும்

அரசியலில் குரு-சிஷ்ய நட்புக்கு உதாரணமாக யாரைச் சொல்லலாம்?

தீரர் சத்தியமூர்த்தியையும் பெருந்தலைவர் காமராஜரையும் சொல்லலாம்.
                      
சத்தியமூர்த்தியை வைத்து விருதுநகரில் கூட்டம் போட்டவர் காமராஜர். அன்றைய காங்கிரஸில் ராஜாஜியா, சத்தியமூர்த்தியா என்ற போட்டிதான் இருந்தது. அதில் சத்தியமூர்த்தி பின்னால் காமராஜர் நின்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சத்தியமூர்த்தி ஆனபோது, சிஷ்யன் காமராஜர் செயலாளராக ஆனார். தனக்குத் தெரிந்த எல்லா டெல்லித் தலைவர்களையும் காமராஜருக்கு அறிமுகம்செய்து வைத்தார் சத்தியமூர்த்தி. சில ஆண்டுகள் கழித்து நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராஜரை நிறுத்தினார் சத்தியமூர்த்தி. அப்போது செயலாளர் பதவியை சத்தியமூர்த்தி வகித்தார். அவருக்கு கீழே செயலாளராக இருப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். சிஷ்யனின் தலைமையை குரு ஏற்றுக் கொண்ட காலம் அது. 1943-ல் சத்தியமூர்த்தி இறந்துபோனார். 11 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன காமராஜர், பதவி ஏற்பதற்கு முன்னதாக நேராக சத்தியமூர்த்தியின் வீட்டுக்குப் போய் அவரது மனைவி பாலசுந்தரத்து அம்மாளிடம் ஆசீர்வாதம் வாங்கினார். காங்கிரஸ் கட்சித் தலைமையகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் என்று பெயரும் சூட்டினார்.

தன்னுடைய சிஷ்யன் வளர்வதைப் பார்த்து பெருமைப்பட்டார் குரு. தன்னுடைய குருநாதர் புகழை கடைசி வரை பரப்பினார் சிஷ்யர். இந்தக் காலத்தில் இது சாத்தியமா?

ஜூனியர் விகடன்

காமராஜர் 111


1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது. 

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார். 

3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.. 

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள். 

6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும். 

7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார். 

8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும். 

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். 

10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி. எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார். 

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார். 

12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்'' வெட்டுவார். 

13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. 

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் "காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார். 

15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார். 

16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார். 

17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். 

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார். 

19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார். 

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார். 

21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள். 

22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது. 

23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். 

24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார். 

25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். 

26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு. 

27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது. 

28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார். 

29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார். 

30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார். 

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார். 

32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு. 

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார். 

34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார். 

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார். 

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார். 

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். 

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது. 

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால் `கறுப்பு காந்தி' என்று அர்த்தம். 

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும். 

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார். 

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார். 

43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். 

44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன. 

45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். 

46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள். 

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். 

48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை. 

49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார். 

50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார். 

51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார். 

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது. 

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது. 

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான். 

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை. 

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார் 

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்' என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும். 

58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான். 

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார். 

60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார். 

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார். 

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது. 

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக் காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான். 

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது. 

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். 

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது. 

67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார். 

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும். 

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது. 

71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது. 

72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 

73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா" எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது. 

74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3). நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. 

75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார். 

76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி, முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான். 

77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர். 

78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார். 

79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.

80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார். 
81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டு நினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால் தலையைவெளியிட்டது. 

82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என். சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது. 

83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 

84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்' என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது. 

85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது. 

86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான். 

87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்! 

88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து! 

89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்! 

90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்! 

91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்! 

92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது. 

93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார். 

94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. 

95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர். 

96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லி அனுப்பி விடுவார். 

97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார். 

98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.

99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு. 

100. சொற்களை வீணாகச் செலவழிக்க மாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை. 

101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை. 

102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத்தெரியும். 

103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார். தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத் தயங்குவதில்லை. 

104. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார். 

105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர் முழுமையாகப்பெற்றிருந்தார். அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது. 

106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர். 

107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது. 

108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர் அவர். 

109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.

110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை. அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார். 

111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச் செல்வார்.

Thursday, September 12, 2013

உதயகுமார்



                                       

வீதி நாடக கலைஞர் சப்தர் ஹஸ்மி கொலைச் செய்யப்பட்ட பத்தாவது ஆண்டு நினைவு விழா தஸ்தக் டெல்லியில் 1998ல் ஒரு பெரும் சர்வதேச விழாவாகக் கொண்டாடப்பட்டது. அங்கு உதயகுமார் ஹிந்துத்துவ அரசியலின் போக்குகள் குறித்து மிக காத்திரமான பார்வைகளுடன் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அவரது பேச்சு அன்று ஹிந்துத்துவத்தின் போக்குகள் குறித்து ஒரு செரிவான உரையாடலைச் சாத்தியமாக்கியது. அப்பொழுது அவர் அமெரிக்காவின் மினியாஃபாலிசில் உள்ள மினியஸோடா பல்கலைக் கழகத்தில் இனம் மற்றும் வறுமை(Race and Poverty) பற்றிய ஆய்வுத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அடுத்து அவரது பல கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன். இலங்கைப் பிரச்சனை தொடர்பான “Intervention in Srilanka: History andProspects”ஸும் இந்திய ஹிந்துத்துவ அரசியல் தொடர்பான “Presenting the Past:The Politics of ‘Hindu’ History Writing in India”வும் உலகம் வரலாறு சமூகம் சார் அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. அவர் இணையதளத்தில் அமைதிக்கான, சமாதானத்துகான ஒரு படிப்பை நடத்தி வந்தார்.

பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்து இங்கு செய்த பல மோசடிகளை அவர் தனது வலைத்தளத்தில் (www.bjpgovernmentwatch.com)எழுதி வந்தார். இந்த வலைத்தளம் சார்ந்த ஆலோசனைகளை என்.ராம் அவர்கள் வழங்கினார். இங்கு அவுட்லுக், இந்தியா டுடே என பல ஆங்கிலப் பத்திரிகைகளில் தொடர்ந்து அவரது கட்டுரைகள் வெளிவந்தன. அவர் அமெரிக்காவில் பணியாற்றிய பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பல இந்திய அறிவுஜீவிகளை அறிமுகம் செய்திருந்தார். ஆஷிஷ் நந்தி, என்.ராம், அட்மிரல் ராம்தாஸ், பிரபுல் பித்வாய், அஃசின் விநாயக், க்யான் பிரகாஷ், கே.என்.பணிக்கர், அஸ்கர் அலி என்ஜினியர் என பல எழுத்தாளர்களை செயல்பாட்டாளர்களை அவர் அமெரிக்கா அழைத்துச் சென்று பல்கலைக் கழகத்தில் உரைகளை நிகழ்த்தச் செய்தார். அமெரிக்கா வாழ் இந்தியர்களின் மத்தியில் மிகவும் சுறுசுறுப்பான செயல்பாட்டாளராக அவர் திகழ்ந்தார்.

2007ல் வாஷிங்டன் டி.சியில் நடந்த விழாவில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை அவரது பணிகளை பாராட்டி விருது கொடுத்து கெளரவித்தது.அவரது பிரியத்திற்குரிய பாட்டி புற்று நோயால் மிகவும்அவதிப்பட்டு மரணம் அடைந்தார். அப்பொழுது உதயகுமாரின் பெற்றோர் அந்த பாட்டிக்கு அருகில் அவரைப் பல ஆண்டுகள் அனுமதிக்கவில்லை. மெல்ல அவரது குடும்பத்தில் பலர் புற்று நோயால் இறந்தனர். இந்தப் பின்னணியில் தான் கதிரியக்கம் ஏற்கனவே அதிகமாக உள்ள கன்னியாகுமரியில் அணு உலையைத் திறந்தால் இங்குள்ள மக்கள் மிகவேகமாகப் புற்றின் வலையில் விழுந்து மடிவார்கள் என்பதால் கூடங்குளம் உலையை பற்றி அரசு அறிவித்த நாள் முதல் அது சார்ந்து செயல்படத் தொடங்கினார் உதயகுமார். ஒவ்வொரு வருடமும் விடுமுறையில் அவர் இங்கு வரும்போது தன் குடும்பத்தாருடன் செலவிட்ட நேரத்தைவிட, இந்த ஆபத்தை எப்படியும் விளக்கிட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் மத்தியிலும், நாகர்கோவில் வாழ் பெரியவர்களுடனும் செலவிட்டதுதான் அதிகம். சில விடுமுறைகளில் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் டெல்லியில் சந்தித்து அனைவருக்கும் இது பற்றிய எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். பின் ஒரு கட்டத்தில் இந்தியாவிற்கே வந்து இங்கு தங்கிவிட்டார். தொடர்ந்து இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் உள்ள அணு ஆயுத, அணு உலை எதிர்ப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

அமெரிக்காவில் வாழ்ந்த பின் ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறாமல், தன் தாய் நாட்டிற்காக எல்லாவற்றையும் விடுத்து தன் மனசாட்சியின் குரலை பின்தொடர்ந்து வந்த மிகச் சிலரில் உதயகுமார் முதன்மையானவர்.

இந்த தேச பக்தரைக் கொச்சைப்படுத்தி ஒரு பத்திரிகை தினமும் பிழைப்பு நடத்தி வருகிறது.

(சமூக செயற்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் “கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்” என்ற நூலில் இருந்து…)

Wednesday, September 11, 2013

ஒரு காலத்தில , காமராஜர் காமராஜர்னு ....


         ஒரு காலத்தில , காமராஜர் காமராஜர்னு ஒரு அரசியல்வாதி இருந்தாராம்....!மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினாராம்..

                                     

'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினாராம் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டாராம் இந்த காமராஜர்....!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்களெல்லாம் அழுதார்களாம்.."'இதுதான்யா ஜனநாயகம்....ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னாராம் ..!ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் - இவ்வளவுதானாம் ....! ஒரு அரசியல்வாதி இருந்தாராம்....!

எளிமையின் சிகரம் - காமராஜ்

    அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் மறுபதிப்பாகவும் வாழ வேண்டும். அரசியல்வாதிகளின் எளிமையான தோற்றம் அவர்களை மக்களோடு சமப்படுத்தும். பகட்டும் படோபாவமும், ஆடம்பரமும் அகங்காரமும் மன்னர்களிடம் இருந்து அதனாலேயே அழிந்தார்கள். இன்று மக்களை வழி நடத்தும் அரசியல்வாதிகளும் அதே தவற்றைச் செய்யலாமா? இந்த மனோபாவத்தை மாற்றும் மனிதனாக எளிமையாய் வாழ்ந்து அரசியலில் எளிமையின் சிகரமாய் பரிணமித்தவர்தான் பாரதப் பெருந்தலைவர்.

 

இந்தியாவில் வேட்டி சட்டைப்போடும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் வெளிநாடு போகும்போது மட்டும் கோட்டு சூட்டு போட்டு கோலம் செய்கிறார்கள். இது மண்ணின் மகத்துவத்தை மட்டும் மறைப்பதில்லை. நம்மையும் அது அந்நியப்படுத்திவிடுகின்றது.

1953 ல் பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது.எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார்.தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார். அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.

டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான். இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலாயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார்.கடித்த்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர். எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதாக’ எழுதியிருந்தார்.

வேங்கடராஜுலுக்கு பயம்.’தலைவர் வந்தும் ஜெனரல் டெம்ப்லரைச் சந்திக்க செல்ல வேண்டும். காமராஜ் தனது வழக்கப்படி கைத்தறி ஆடைகளோடு வந்துவிடக்கூடாது’ -என்று மனம் வருந்தினார்.டெம்ப்ளர் சாதாரண உடைகளை உடுத்தி இருப்பவர்களை மிகச் சாதாரணமாகவே மதித்து வெளியில் அனுப்பிவிடுவார். எனவே வேங்கடராஜுலு மனம் வருந்தியதில் உண்மை இருக்கிறது.

காமராஜ் வரும் விமானத்தை எதிர்பார்த்து கோலாலம்பூர் குதூகலித்தது. இந்தியத் தலைமகனைக் காண எங்கெங்கு பார்த்தாலும் தலைகள்!வேங்கடராஜுலு சந்தேகப்பட்டது போலவே நடந்துவிட்டது.

விமானத்தை விட்டு காமராஜ் எப்போதும் போலவே வேட்டி சட்டையுடன் வெளிவந்ததைக் கண்டு கலங்கினார் அமைப்பாளர். எப்போதும் போல் சாதாரணமாக கதர் வேஷ்டி, சட்டை, துண்டுடன் தலைவர் தன் தாயகத்தை உடையில் சுமந்துபோய் உள்ளத்தைக் காட்டிக்கொண்டிருந்தார். அழைத்த வேங்கடராஜுலு அகம் நொந்தார். இனி தலைவர்பாடு கமிசனர்பாடு என்று நினைத்தவாறே தலைவர் கமிஷனரிடம் அழைத்துப்போனார். எப்படியோ தலைவரை எதிர்ப்பார்த்த ஜெனரல் எளிமையாகப் பார்த்ததும் அசந்துபோனார்.

காமராஜரை வெறுக்கவில்லை. மாறாக தலைவரிடம் தனியே இருந்து பல மணி நேரம் பேசினார் ஜெனரல் டெம்ப்ளர் அவர்கள். பேசி முடித்து தலைவரை வழியனுப்ப வந்தவர்களிடம் ஜெனரல் அவர்கள் காமராஜர் அவர்களின் எளிமை மிகவும் பிடித்துப்போனது’ என்று கூறி எளிமையை சிகரத்தில் ஏற்றினார். இன்றோ ஒருநாள் கூத்துக்காக ஒன்பது ஜோடி கோட் சூட் தைத்து ஒரு முறை மட்டுமே மகிழ்கிறார்கள் அரசியல்வாதிகள்.

அதன் பின் ஒரு முறை ரஷ்யா செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோதும், தனக்காகத் தைத்தகோட் சூட்டையே வேண்டாம் என உதறிவிட்டு அதே எளிய உடையுடனே சென்று வந்தார். ரஷ்யா குளிர் அதிகம் உடைய நாடு. இருந்தும் தோளில் ஒரு துண்டைப் போட்டுவிட்டு எப்போதும்போல் எதார்த்தமாக ஒரு வேஷ்டி சட்டையை அணிந்து வெற்றியோடு திரும்பி வந்தார் தலைவர்.

இந்தப் பயணத்துக்காக தைத்து தலைவர் அணியாத ஆடைதான் அவரது நினைவகத்தில் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது. எங்கும் இவர் அணிந்த ஆடை என்று காட்சிக்கு வைப்பதைதான் பார்த்திருக்கின்றோம். ஆனால் – இது ரஷ்யா செல்ல தொண்டர்களால் தைத்துக் கொடுக்கப்பட்ட ஆடை , இதை தலைவர் அணிய மறுத்துவிட்டார்.’ என்ற செய்தியுடன் அவ்வாடை காட்சியில் வைக்கப்பட்டுள்ளது உலகிலேயே நமது அரசியல் தலைவனின் நினைவிடத்தில் மட்டுந்தான்.

இவ்விதம் எளிமையின் திருவுருவமாய்த் தோன்றி எளிமையின் சிகரமாக வாழ்ந்து இன்றைய அரசியல்வாதிகளுக்கு விளக்காக வாழ்ந்த பெருந்தலைவரின் இவ்வரிய வாழ்க்கை எல்லோரும் படிக்க வேண்டிய பாடமாகும்

7 - 8ஆம் நூற்றாண்டு, வேட்டுவன் கோவில்

7 - 8ஆம் நூற்றாண்டு, வேட்டுவன் கோவில், - கழுகுமலை,தூத்துக்குடி மாவட்டம்,தமிழகம்.

                
இந்த கோவில் ஒரு பாறையில் செதுக்க பட்டது. இன்று இருக்கும் diamond cutting கருவிகள் வைத்து கூட செதுக்க முடியாத வடிவமைப்புகள் அப்போதே தமிழன் செதுக்கி விட்டான்.

இது இப்போது உலகில் இருக்கும் அணைத்து விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எப்படி செதுக்கினார்கள் தமிழர்கள் என்று வியந்து போய் உள்ளனர். 

1300 வருடமாக இருக்கும் நமது( தமிழனின்) கைவண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்???

வ.உ.சி


வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை : : 

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
 

வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். பாரதியார் ஒரு பெரும் புலவர். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார். வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களானர்கள்.

வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும்.

இப்படி பட்ட மா மனிதர், செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சி-கப்பல் ஒட்டிய தமிழர் அவர்களை ஒரு பொழுதும் மறந்துவிடக் கூடாது

வரிவடிவ திருக்குறள்

                           

              திருக்குறள் எழுதிய வண்ணம்
====================================

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் தன் குறளை எப்படி எழுதியிருப்பார் என்று கற்பனை செய்து பார்த்ததுண்டா? படத்தைக் காணுங்கள். தலை சுற்றுகிறதா? காலந்தோறும் வளர்ந்த தமிழ் எழுத்தின் வரிவடிவை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் காலத்திய கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறளைத் தந்துள்ளனர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் திருவாளர்கள் கிப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜன், எம். சந்திரசேகரன் ஆகியோர்.

தென்னாட்டுக் குகைக் கல்வெட்டு எழுத்துக்களான "தமிழ் பிராமி" எனும் தமிழ் எழுத்து காலத்தில் நம்முடைய தமிழ் எழுத்து வடிவமைப்பில் திருக்குறள் எப்படி எழுதப் பெற்றிருக்கும் என்பதைக் காணுங்கள். அப்படத்தில் உள்ள குறள் கீழே :-

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்கு மாறு.

ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
உள்ளம் உடைக்கும் படை.

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.

தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலி னாங்கொன்று உடைத்து.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.

ஊடிப் பெருகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
 

Like ME

Sample Text

Sample Text