Wednesday, September 11, 2013

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பார்வையில் பாரதியார்

                                         

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பார்வையில்... 
சுப்பிரமணிய பாரதியார்

இந்திய வரலாற்றில் இரண்டு தத்துவ மரபுகள் உண்டு. ஒன்று வைதீக மரபு. மற்றொன்று அவைதீக மரபு. வைதீக மரபு வழி நின்று சாதி எதிர்ப்பு நிலைக்கு வந்தவர்களாக இராமானுசர், விவேகானந்தர், காந்தியார், பாரதியார் ஆகியோரை குறிப்பிடலாம். அவைதீக மரபு வழி நின்று சாதி எதிர்ப்பு நிலைக்கு வந்தவர்களாக வள்ளலார், சித்தர்கள், பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் ஆகியோரைச் சொல்லலாம். 

நேரெதிர் முரண்பாடு கொண்ட பாரதியையும் பாரதி தாசனையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்தவை தமிழ்மொழி உணர்ச்சியும் சாதியெதிர்ப்பும் என்றால் மிகையாகாது.

பெரியாரை ஆசனாக வரித்துக் கொண்ட பாரதிதாசன் பெரியாரைக் கூட விமர்சித்தது உண்டு. ஆனால் பாரதியாரை ஒருபோதும் விமர்சித்ததில்லை. பாரதி ஆத்திகராக இருந்த போதிலும் அவர் மீது பாரதிதாசன் அளவிடற்கரிய பற்று கொண்டிருந்தார். கனக சுப்பு ரத்தினம் எனும் தனது இயற்பெயரை பாரதிதாசன் என்று மாற்றியவர். அதற்காக கடுஞ்சட்டைத் தோழர்கள் கணை பாய்ச்சிய போதும் அவர் கலங்க வில்லை. பாரதிதாசன் பெயர் வைத்தது தவறென்று எண்ணியதுமில்லை. சாகும் தருவாயிலும் தவறென்று வருந்தியதுமில்லை. தான் "பாரதிதாசன் என்று பெயர் வைத்ததற்கு காரணம் அப்போது அவர் என்னுளத்தில் முதலிடம் பெற்றிருந்தது தான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார் தாம். சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்த வரை நான் கண்டதில்லை. 

பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்டுகளுக்குப் பிறகே பெரியார் இயக்கம் தோன்றியது" என்று வசவாளர்களுக்கு பதிலடி தந்தார். பெரியாருடன் நெருக்கமான நிலையிலும் 1935இல் பாரதியின் நிறைவேறாமல் போன விருப்பமான 'சுப்பிரமணிய கவிதா மண்டலம்' இதழைத் தொடங்கினார். தந்தை பெரியாரை விட்டு விலகிய நிலையிலும் 1964இல் பாரதியார் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க விரும்பினார். தமிழ்ச் சான்றோர்களுக்கு திரைப்படத்தில் மகாகவி பாரதி என்கிற விண்ணப்பத்தை அனுப்பி நிதி வேண்டினார். அக்காரியம் கைகூடுவதற்குள் பாரதி தாசன் மறைந்து போனார்.

திராவிட இயக்கத்தால் போற்றப்படும் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் பாரதிதாசன் தன்னிடம் கூறியதாக கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்: பாரதியைப் போல் நானும் அன்று பேராயக்கட்சியை சார்ந்தவன். கதரைத் தோளில் சுமந்து விற்றவன். நானும் ஆத்திகன். சுப்பிரமணியர் துதியமுது பாடியவன். அப்போது அவரிடத்திலும் தனித் தமிழ் இல்லை. என்னிடத்திலும் தனித் தமிழ் இல்லை. பாரதி படிப்படியாக சீர்திருத்தவாதியாக மாறி வந்ததை கண்ணாரக் கண்டேன். பாரதி உயிரோடிருந்தால் சுயமரியாதைக் காரனாக மாறியிருப்பார்." பாரதி தாசன் கூற்று இப்படி இருக்க பாரதியாரை வைதீகச் சிமிழுக்குள் அடைக்க ஆரியத்தின் பாரதீய சனதா பார்ட்டிகளும், திராவிடத்தின் பாரதீய சனதா பார்ட்டிகளும் முயன்று வருவது வேடிக்கையாக உள்ளது. 

No comments:

Post a Comment

 

Like ME

Sample Text

Sample Text