Thursday, September 12, 2013

உதயகுமார்



                                       

வீதி நாடக கலைஞர் சப்தர் ஹஸ்மி கொலைச் செய்யப்பட்ட பத்தாவது ஆண்டு நினைவு விழா தஸ்தக் டெல்லியில் 1998ல் ஒரு பெரும் சர்வதேச விழாவாகக் கொண்டாடப்பட்டது. அங்கு உதயகுமார் ஹிந்துத்துவ அரசியலின் போக்குகள் குறித்து மிக காத்திரமான பார்வைகளுடன் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அவரது பேச்சு அன்று ஹிந்துத்துவத்தின் போக்குகள் குறித்து ஒரு செரிவான உரையாடலைச் சாத்தியமாக்கியது. அப்பொழுது அவர் அமெரிக்காவின் மினியாஃபாலிசில் உள்ள மினியஸோடா பல்கலைக் கழகத்தில் இனம் மற்றும் வறுமை(Race and Poverty) பற்றிய ஆய்வுத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அடுத்து அவரது பல கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன். இலங்கைப் பிரச்சனை தொடர்பான “Intervention in Srilanka: History andProspects”ஸும் இந்திய ஹிந்துத்துவ அரசியல் தொடர்பான “Presenting the Past:The Politics of ‘Hindu’ History Writing in India”வும் உலகம் வரலாறு சமூகம் சார் அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. அவர் இணையதளத்தில் அமைதிக்கான, சமாதானத்துகான ஒரு படிப்பை நடத்தி வந்தார்.

பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்து இங்கு செய்த பல மோசடிகளை அவர் தனது வலைத்தளத்தில் (www.bjpgovernmentwatch.com)எழுதி வந்தார். இந்த வலைத்தளம் சார்ந்த ஆலோசனைகளை என்.ராம் அவர்கள் வழங்கினார். இங்கு அவுட்லுக், இந்தியா டுடே என பல ஆங்கிலப் பத்திரிகைகளில் தொடர்ந்து அவரது கட்டுரைகள் வெளிவந்தன. அவர் அமெரிக்காவில் பணியாற்றிய பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பல இந்திய அறிவுஜீவிகளை அறிமுகம் செய்திருந்தார். ஆஷிஷ் நந்தி, என்.ராம், அட்மிரல் ராம்தாஸ், பிரபுல் பித்வாய், அஃசின் விநாயக், க்யான் பிரகாஷ், கே.என்.பணிக்கர், அஸ்கர் அலி என்ஜினியர் என பல எழுத்தாளர்களை செயல்பாட்டாளர்களை அவர் அமெரிக்கா அழைத்துச் சென்று பல்கலைக் கழகத்தில் உரைகளை நிகழ்த்தச் செய்தார். அமெரிக்கா வாழ் இந்தியர்களின் மத்தியில் மிகவும் சுறுசுறுப்பான செயல்பாட்டாளராக அவர் திகழ்ந்தார்.

2007ல் வாஷிங்டன் டி.சியில் நடந்த விழாவில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை அவரது பணிகளை பாராட்டி விருது கொடுத்து கெளரவித்தது.அவரது பிரியத்திற்குரிய பாட்டி புற்று நோயால் மிகவும்அவதிப்பட்டு மரணம் அடைந்தார். அப்பொழுது உதயகுமாரின் பெற்றோர் அந்த பாட்டிக்கு அருகில் அவரைப் பல ஆண்டுகள் அனுமதிக்கவில்லை. மெல்ல அவரது குடும்பத்தில் பலர் புற்று நோயால் இறந்தனர். இந்தப் பின்னணியில் தான் கதிரியக்கம் ஏற்கனவே அதிகமாக உள்ள கன்னியாகுமரியில் அணு உலையைத் திறந்தால் இங்குள்ள மக்கள் மிகவேகமாகப் புற்றின் வலையில் விழுந்து மடிவார்கள் என்பதால் கூடங்குளம் உலையை பற்றி அரசு அறிவித்த நாள் முதல் அது சார்ந்து செயல்படத் தொடங்கினார் உதயகுமார். ஒவ்வொரு வருடமும் விடுமுறையில் அவர் இங்கு வரும்போது தன் குடும்பத்தாருடன் செலவிட்ட நேரத்தைவிட, இந்த ஆபத்தை எப்படியும் விளக்கிட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் மத்தியிலும், நாகர்கோவில் வாழ் பெரியவர்களுடனும் செலவிட்டதுதான் அதிகம். சில விடுமுறைகளில் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் டெல்லியில் சந்தித்து அனைவருக்கும் இது பற்றிய எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். பின் ஒரு கட்டத்தில் இந்தியாவிற்கே வந்து இங்கு தங்கிவிட்டார். தொடர்ந்து இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் உள்ள அணு ஆயுத, அணு உலை எதிர்ப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

அமெரிக்காவில் வாழ்ந்த பின் ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறாமல், தன் தாய் நாட்டிற்காக எல்லாவற்றையும் விடுத்து தன் மனசாட்சியின் குரலை பின்தொடர்ந்து வந்த மிகச் சிலரில் உதயகுமார் முதன்மையானவர்.

இந்த தேச பக்தரைக் கொச்சைப்படுத்தி ஒரு பத்திரிகை தினமும் பிழைப்பு நடத்தி வருகிறது.

(சமூக செயற்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் “கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்” என்ற நூலில் இருந்து…)

No comments:

Post a Comment

 

Like ME

Sample Text

Sample Text