ஹிந்திய பயங்கரவாதிகளினால் திலீபன் அண்ணாவை இழந்து விடுவோமா என்ற அச்சத்தில் 9ம் நாள்..

1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 23ம் திகதி இது திலீபனுடன் 9ம் நாள். அதிகாலை 5 மணியிருக்கும் கிழக்குப்பக்கத்திலே தேர் முட்டி வாசலில் நின்றிருந்த வேப்பமரத்திலிருந்து குயில் ஒன்று கூவிக்கொண்டிருந்தது. அதன் குரலிர் ஒலித்த விரக்தியின் சாயலை கேட்ட நான் திலீபனை ஏக்கத்துடன் பார்த்தேன். அந்தக்குயில் எதை இழந்து இப்படிக்கூவுகிறதோ தெரியவில்லை ஆனால் இந்தக்குயில் எம்மை எம் இனத்தைக்காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே இந்தக்குயிலின் சோக கீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை. திலீபனை நன்றாக உற்றுப்பார்க்கிறேன்.
அவரின் உடலிலுள்ள சகல உறுப்புக்களும் இன்று செயலற்றுக்கொண்டிருக்கின்ற ன உதடுகள் அசைகின்றன ஆனால் சத்தம் வெளிவரவில்லை. உதடுகள் பாளம்பாளமாக வெடித்து வெளிருற்று இருந்தன. கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன. இன்று காலை 8.30 மணியிலிருந்து யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 17 பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்து கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை 9 மணியளவில் யாழ் கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்த இந்திய படையினர்வெளியே வராதவாறு மறியல் செய்யத்தொடங்கினர். பொதவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்த வந்த அதே வேளை பொதுமக்களின் குமுறல்களும் அதிகரித்ததை புரிந்து கொள்ள முடிந்தது.
திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இன்று காலை இந்தியப்படையின் தென்பிராந்தியத்தளபதி லெப்.ஜெனரல். திபேந்திர சிங் அவர்கள் கெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்து இறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர்.
1 மணி நேரத்திற்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான். கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக்கணக்காண மக்களின் எழுச்சியை கண்ட பின்னர்தான் தளபதி அவர்கள தலைவர் பிரபாகரனை காண பறந்து வந்திருக்கவேண்டும். திலிபனின் 5 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள் பிரதமர் ராஜுவ்காந்திக்கு மகஜர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்திய தூதுவர் டிக்சிற் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பதுதான் அது. ஆம் பிற்பகல் 1.30 மணியிலிருந்த பிற்பகல் 6.30 மணி வரை இரு குழுக்களும் அமைதியாக பேச்சு வார்த்தையை நடாத்தின. இந்தியத்தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தூதவர் டிக்சிற், இந்திப்படையின் தென்பிராந்தியத்தளபதி லெப். ஜெனரல் திபேந்திர சிங், அமைதி காக்கும் படைத்தளபதி மேஜர் ஜெனரல் கர்க்கிற்சிங், பிரிகேடியர் பெர்ணான்டஸ், இந்திய தூதரக பாதுகாப்பு அதிகாரி கப்டன் குப்தா.
விடுதலைப்புலிகளின் தரப்பில் தலைவர் பிரபாகரனுடன், திரு.அன்ரன் பாலசிங்கம், வழக்கறிஞர் திரு. கோடீஸ்வரன், திரு. சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக செய்தி வந்ததுமே என்னையறியாமலே என் மனம் துள்ளிக்குதித்தது. 9ம் நாளான இன்று எப்படியும் நல்ல முடிவு ஏற்படும் அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக யாழ் பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சை பிரிவில் விசேட சிகிச்சை அளிக்கவேண்டும் எமக்காக இத்தனை நாட்களாக துன்பப்பட்டு அணுஅணுவாக தன்னை வருத்திக்கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம் நிச்சயமாக பூத்துக்குலுங்கத்தான் போகிறது என்ற கற்பனைக்கடலில் இரவு 7.30 மணி வரை நானும் எனது நண்பர்களும் மிதந்து கொண்டிருந்தோம்.
இரவு 7.30 மணிக்கு அந்த செய்தி என் காதில் வந்து விழுந்த போது இந்த உலகமே தலை கீழாக சுற்றத்தொடங்கியது. அந்தக்கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்ந்து தவிடுபொடியாகியது. ஆம் பேச்சுவார்த்தையின் போது இந்தியத்தூதுவரால் வெறும் உறுதிமொழிகளை மட்டுந்தான் தர முடிந்தது. திலீபனின் உண்ணாவிரத போராட்டம் ஓர் தொடர்கதையாகவே ஆகிவிட்டது.எழுத்தில் எந்தவித உறுதி மொழிகளும் இந்தியத்தரப்பு தர விரும்பவில்லை என்பதை அவர்கள் நடத்தை உறுதிசெய்தது. திலீபனின் மரணம் பயணம் இறுதியானது என்பதையு11ம் அது உணர்த்தியது
கவிஞர் மு.வா.யோ
No comments:
Post a Comment