வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

பல இலங்கைத் தமிழர்கள் அவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என செ. பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி, மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறிய பையன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவனது உடலத்தின் புகைப்படமும் கிடைக்கப் பெற்றது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
குடும்பப் பின்னணி:-
வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி. பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள்.
சிறுவயது அனுபவங்கள்:-
பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் இலங்கைத் தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார்.
ஆரம்பக் கல்வியும் போராட்ட ஈடுபாடும்:-
பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.
தபால்தலை வெளியீடு:-
பிரான்சில் உள்ள செயற்பாட்டாளர்கள் இவரது உருவப்படத்தைக் கொண்ட தபால்தலையை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சின் அஞ்சல் துறை அங்கீகாரம் அளித்துள்ளது. இத்துடன் தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலர், புலிக்கொடி ஆகியவற்றைக் கொண்ட தபால்தலை முத்திரைகளும் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பிரான்சிலுள்ள இலங்கை தூதரகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment